உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / நேர்மையின் இன்னோரு பெயர் பத்மா

நேர்மையின் இன்னோரு பெயர் பத்மா

'ஒரு கிராம் திருகாணி வாங்கவே பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் தேவைப்படும் காலம் இது. ஆனால், தன் கண் முன்னால் 45 பவுன் தங்கம் மின்னியபோதும், அது அடுத்தவர் உழைப்பு என்று ஒதுக்கித் தள்ளிய ஒரு உன்னத மனுஷியைப் பற்றித்தான் ஊரே பேசிக் கொண்டிருக்கிறது!'சென்னை திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம்பேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான பத்மா. சென்னை மாநகராட்சியில் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளராகப் பணிபுரியும் இவர், தினமும் அதிகாலையில் தெருக்களைத் தூய்மைப்படுத்தும் பணியைச் செய்து வருகிறார். வழக்கம் போல ஒருநாள் தி.நகர் மகாராஜா சந்தானம் தெருவில் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்தபோது, குப்பை மேட்டிற்குள் ஒரு கவர் கிடப்பதைக் கண்டார்.சாதாரணமாக நினைத்து அதை எடுத்துப் பார்த்த பத்மாவிற்குத் தூக்கி வாரிப் போட்டது. அந்தப் பையில் கண்ணைப் பறிக்கும் தங்க நகைகள்! சுமார் 48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 45 பவுன் நகைகள் அவை. ஒரு கணம் அதிர்ந்தாலும், அடுத்த கணம் அவரது நேர்மை தலைதூக்கியது. 'யாருடைய உழைப்போ இது... தொலைத்தவர்கள் எவ்வளவு பதறுவார்கள்?' என்ற மனிதாபிமானம் தான் அவரிடம் மேலோங்கி நின்றது.உடனடியாகத் தன் உயரதிகாரிக்குத் தகவல் தெரிவித்த பத்மா, காலதாமதம் செய்யாமல் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் அந்த நகைகளை ஒப்படைத்தார். போலீசாரின் விசாரணையில், அந்த நகைகள் நங்கநல்லூரைச் சேர்ந்த நகை வியாபாரி பரமேஷ் என்பவருடையது என்பது தெரியவந்தது. கவனக்குறைவாகத் தவறவிட்ட அந்தப் பெரும் சொத்து, பத்மாவின் நேர்மையால் மீண்டும் உரியவரிடம் சேர்ந்தது.பணத்தை விடப் பெரியது 'குணம்': பணியில் மட்டுமல்ல, மனதிலும் 'தூய்மை'யைக் கடைப்பிடித்த பத்மாவின் புகழ் காட்டுத்தீயாகப் பரவியது. ஏழ்மையிலும் நேர்மை மாறாத அவரைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அழைத்து நெகிழ்ந்து பாராட்டினார். அவரது நேர்மைக்கு அங்கீகாரமாக 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கிக் கௌரவித்தார். அதேபோல், தொழிலதிபர் சலானி அவர்களும் பத்மாவின் குடும்பத்தை நேரில் அழைத்து 10 ஆயிரம் ரூபாய் வழங்கிச் சிறப்பித்தனர்.இன்று தங்கம் விலை விண்ணைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், 45 பவுன் நகையை விடத் தன் நேர்மைதான் விலைமதிப்பற்றது என நிரூபித்துக்காட்டிய பத்மா, இன்றைய சமூகத்தின் உண்மையான அடையாளம். தெருக்களைச் சுத்தம் செய்யும் பத்மா, இன்று ஒட்டுமொத்தத் தமிழகத்தின் மனங்களையும் தன் நேர்மையால் வென்றுவிட்டார்!-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ravi om namasivaya
ஜன 16, 2026 09:42

வறுமையிலும் நேர்மை வாழ்த்த வேண்டிய செயல் பாராட்டடுக்கள் நன்றி


Bahurudeen Ali Ahamed
ஜன 15, 2026 11:07

தங்க மனது சகோதரிக்கு வாழ்த்துக்கள்


Krishna Renga
ஜன 15, 2026 02:21

கடவுள் கருணை மழை உங்களுக்கு எப்பொழுதும் கிடைக்கட்டும்.


Balaa
ஜன 14, 2026 17:50

பாராட்டி பரிசு கொடுத்துவரும், பக்கத்தில் இருப்பவரும், மற்றும் அவரது சகாக்களும் பத்மா வழியில் நேர்மையை கடைப்பிடிக்கலாமே. செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா...


Balaa
ஜன 14, 2026 17:46

தலை வணங்குகிறேன்.


முக்கிய வீடியோ