UPDATED : ஆக 11, 2026 03:54 PM | ADDED : ஆக 11, 2026 03:41 PM
'இது என்ன பூனைகளின் சொர்க்க பூமியா? இந்த அளவிற்கு அவை சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறதே!' என அங்கிருக்கும் தெருக்களில் உலா வரும் பூனைகளைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்.அந்த இடம் துருக்கியின் இஸ்தான்புல் நகராகும். சான்ட்விச் கடைகளுக்கும் கலைக்கூடங்களுக்கும் இடையே உள்ள சந்து பொந்துகளில் உலா வரும் பூனைகள் வீடற்ற விலங்குகள் அல்ல; அவை அந்த நகரின் செல்லக் குழந்தைகள்.குறிப்பாக, புகழ்பெற்ற 'சிஹான்கிர்' பகுதியில் வசிக்கும் உள்ளூர்வாசிகளும் வணிகர்களும் இணைந்து மரத்தாலும் அட்டைப்பெட்டிகளாலும் உருவாக்கியுள்ள சிறிய பூனை வீடுகள், இஸ்தான்புல் மக்களின் விவரிக்க முடியாத அன்பிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.இஸ்தான்புல்லில் பூனைகளுக்கென ஒரு நீண்ட வரலாறும் மரியாதையும் உண்டு. ஒட்டோமான் பேரரசு காலத்திலிருந்தே, மர வீடுகளைக் கொண்ட இந்த நகரில் எலிகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த பூனைகள் பெரிதும் உதவின. அதோடு, இஸ்லாமிய கலாச்சாரப் பின்னணியிலும் இங்குள்ள மக்கள் இவற்றை மிகவும் புனிதமான விலங்காகக் கருதுகின்றனர்.சிஹான்கிர் பகுதியின் தெருக்களில் நீங்கள் நடக்கும்போது, கதகதப்பான மெத்தைகளுடன் கூடிய மர வீடுகளையும், அவற்றின் வெளியே நிரம்பி வழியும் உணவு மற்றும் தண்ணீர் கிண்ணங்களையும் காணலாம். குளிர்காலத்தில் பூனைகளுக்குக் குளிராமல் இருக்க உள்ளூர் வாசகர்கள் மின்சார சூடேற்றிகளை (Electric heaters) கூட அமைத்துக் கொடுக்கிறார்கள். தெருப் பூனைகளுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால், அக்கம் பக்கத்தினர் இணைந்து நிதி திரட்டி கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்கின்றனர்.இங்குள்ள மக்களுக்கு பூனை என்பது வெறும் வளர்ப்புப் பிராணி மட்டுமல்ல, சமூகத்தின் ஓர் அங்கம். தெருவோர உணவகங்களில் நாற்காலியில் பூனை தூங்கிக்கொண்டிருந்தால், அதை விரட்டாமல் வாடிக்கையாளர்கள் தள்ளி வேறு நாற்காலியில் அமர்ந்துகொள்ளும் காட்சியை அங்கு சாதாரணமாகக் காணலாம்.'இப்படிப் பராமரித்தால் பூனைகளின் எண்ணிக்கை அபரிமிதமாகப் பெருகிவிடுமே?' என்றொரு கேள்வி எழக்கூடும். அதற்கான பதிலும் அங்கு தயாராக உள்ளது. பூனைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அங்கு ஒரு சிறப்பான கட்டமைப்பு செயல்படுகிறது. தெருவோரப் பூனைகளைப் பிடித்து, கருத்தடை செய்து, வழக்கமான தடுப்பூசிகளும் போட்ட பிறகு மீண்டும் அவை இருந்த பகுதிக்கே கொண்டு வந்து விட்டுவிடுவர். இதனால் நோய்கள் பரவுவதும், பூனைகளின் பெருக்கமும் சீராகக் கட்டுப்படுத்தப்படுகிறது.சுருக்கமாகச் சொன்னால், இஸ்தான்புல் மக்கள் விலங்குகளை வெறும் 'கட்டுப்படுத்தப்பட வேண்டிய உயிரினமாகப்' பார்க்காமல், தங்களோடு வாழும் 'சக குடிமக்களாக' மதிக்கிறார்கள்.நீங்கள் இஸ்தான்புல்லிற்குப் பயணம் செய்தால், வரலாற்றுச் சின்னங்களை மட்டும் பார்த்துவிட்டு வரக் கூடாது; சிஹான்கிர் தெருக்களில் அமர்ந்து, அங்குள்ள அரச பூனைகளுடன் ஒரு கப் துருக்கிய தேநீர் அருந்துவதுதான் அந்த நகரின் உண்மையான ஆன்மாவை உங்களுக்கு உணர்த்தும்.-எல்.முருகராஜ்