UPDATED : செப் 05, 2025 04:45 PM | ADDED : செப் 05, 2025 04:41 PM
செப்டம்பர் முதல் தேதி உலகின் பல பாகங்களில் உள்ள பள்ளிகளில் புதிய கல்வியாண்டின் முதல் நாள்மாணவர்களின் சிரிப்பு, ஆசிரியர்களின் வரவேற்பு, பெற்றோர்களின் பெருமிதம் எல்லாம் கலந்த கொண்டாட்டமான நாள் அது.ஆனால், உக்ரைன் நாட்டின் சுமி பகுதியிலுள்ள போப்ரிக் கிராமத்தில் இந்த காட்சி முற்றிலும் மாறிக் காணப்பட்டது.பூமியின் மேற்பரப்பில் இருந்து சில அடி துாரம் பள்ளத்தில் அமையப்பட்ட அடித்தளத்தில்தான் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது.பெயருக்குதான் பள்ளிக்கூடம் காற்றோற்றமில்லாத அறைகள்,,தண்ணீர் கசியும் தரைகள்,உடைசலான பெஞ்சு நாற்காலிகள், அழுதுவடியும் விளக்கு வெளிச்சங்கள் ஆனாலும் அங்குள்ள மாணவச் செல்வங்களின் முகங்களில் அப்படியொரு பிரகாசம்.போரை விட வலிமையானது கல்வி என்பதை நிரூபிப்பதற்காக தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் அவர்கள்.அறிவை கொழுந்துவிட்டு எரியவைக்க வேண்டிய வழக்கமான பூமியின் மேற்பரப்பில் உள்ள பள்ளி அறைகளின் வெளியே இடைவிடாது கேட்கும் வான்வழி எச்சரிக்கை சைரன்கள்,ஒவ்வொரு நிமிடமும் எதுவும் நிகழலாம் என்ற போர் சூழல்,குண்டுவிழுமோ வெடிக்குமோ என்ற அச்சம் இதெல்லாம் மாணவர்களை பயத்தில் ஆழ்த்தியதே தவிர படிப்பில் ஆழ்த்தவில்லை.பார்த்தார்கள் ஆசிரியர்கள் போர் எப்போது முடிவுக்கு வருமோ தெரியாது ஆனால் நாம் ஒரு முடிவு எடுப்போம் எந்த சூழ்நிலையிலும் கல்வியை முடிவுக்கு கொண்டு வந்துவிடக்கூடாது நாம் இருக்கும் வரை அல்லது இறக்கும் வரை மாணவர்களுக்கான பாடங்களை கற்றுத்தருவது என முடிவு செய்தனர்.கொஞ்சமும் சத்தம் வராத கார் நிறுத்தம் போன்ற அடித்தளங்களை தேடிப்பிடித்தனர் அல்லது அமைத்தனர் குறிப்பாக எந்தவித போர் பற்றிய சைரன் சத்தம் வரக்கூடாது போர் அபாயம் எழக்கூடாது அவ்வளவுதான், கிடைத்த உபகரணங்களைக் கொண்டு பள்ளிகளை அமைத்தனர்,பாடங்களை துவக்கினர்.எதிர்பார்த்ததிற்கும் மேலாக மாணவர்களும், பெற்றோர்களும் ஆதரவு தந்தனர்.அதிகம் ஆப்சென்ட் இல்லாமல் பெரும்பாலான மாணவர்கள் வகுப்புக்கு வந்தனர்,ஆசிரியர்களின் குரல் மட்டும் ஒலிக்கிறது,மாணவர்கள் அமைதியாகக் கேட்கிறார்கள். அவர்களின் கண்களில் தெரியும் ஆர்வம் - போர் நம்முடைய எதிர்காலத்தைப் பறிக்க முடியாது என்பதை வெளிப்படுத்துகிறது.''எங்கள் குழந்தைகள் பயத்தில் வளரக் கூடாது. அவர்கள் புத்தகங்களோடு வளர வேண்டும்” - என்று ஒரு தாய் சொல்வது மனதை உருக்கும் வார்த்தை. அவர்களிடம் இப்போதும் போரின் அச்சம் மிச்சமிருக்கிறது ஆனால், கல்வியின் வலிமை குழந்தைகளை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை அந்த அச்சத்தை மீறி நிற்கிறது.போர் அழிவை ஏற்படுத்துகிறது. வீடுகளையும், தெருக்களையும் சிதைக்கிறது. ஆனால் கல்வியை - அதனைத் தடுக்கவோ துளைக்கவோ முடியவில்லை , இடிந்த சுவர்களே ஆனாலும் இரும்புக் கோட்டையாக நின்று மாணவர்கள் கல்வியைக் காக்கிறது , குழந்தைகள் முன்னிலும் ஆர்வமாக பாடங்களை படிக்கின்றனர்.அவர்களுக்கு தெரிந்திருக்கிறது அறிவுதான் நமக்கான உண்மையான ஆயுதம் என்று.-எல்.முருகராஜ்.