உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / சேத்தன் ஒரு அதி திறமைசாலி

சேத்தன் ஒரு அதி திறமைசாலி

கால்கள் ஊனமுற்று இருந்தாலும் எனக்கென விசேஷ கார் எதுவும் வேண்டாம்,பந்தய வீரர்கள் வழக்கமாக ஒட்டிச் செல்லும் காரையே நானும் ஒட்டிச் செல்கிறேன் என்று கூறி சென்னை பார்முலா கார் பந்தயத்தில் கலந்து கொண்டு அசத்தியுள்ளார் சென்னை வீரர் சேத்தன்.சேத்தன் பிறந்த போதிலிருந்து இரண்டு கால்களிலும் பிரச்னை,மூன்று வயதான போது பிரச்னை பெரிதாக முழங்காலுக்கு கீழ் இரண்டு கால்களையும் நீக்கிவிட்டனர்,மகன் மனமுடைந்துவிடாமல் பார்த்து வளர்த்தவர் அவரது தாய் பத்மாதான்.கால்களில் பிரச்னை என்றால் சக மாணவர்களுடன் விளையாட முடியாதாம்மா? என்று மகன் கேட்ட கேள்வியால், மகனை விளையாட்டுத்துறையில் கொண்டு சென்றார்.இதன் காரணமாக பள்ளியில் கூடைப்பந்தாட்ட குழுவிற்கு சேத்தன்தான் கேப்டன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.கால்கள் இல்லாத குறையே தெரியாத அளவிற்கு உலகின் எந்த மூலையில் விசேடமான செயற்கை கால்கள் அறிமுகமானாலும் முதலில் வாங்கி மகனுக்கு கொடுத்துவிடுவார்,பள்ளிப்படிப்பை முடித்த பிறகு சேத்தனுக்கு கார் பந்தயத்தில் மனம் செல்ல, பராவாயில்லை மகனே உன் மகிழ்ச்சிதான் முக்கியம் என்று கார் பந்தயத்தில் கலந்து கொள்ளச் செய்தார்.இப்போது 31 வயதாகும் சேத்தன் இதுவரை 120 கார் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார், இதில் பல பந்தயங்களில் சாம்பியன் பட்டமும் பெற்றுள்ளார்.சேத்தனுக்கு முன்பாகவே கார் பந்தயங்களில் கலந்து கொள்ளும் கால் ஊனமுற்ற வீரர் ஒருவர் ஜெர்மனியில் இருந்தார் ஆனால் அவர் பிரேக் உள்ளீட்ட முக்கிய பாகங்களை தனது கைகளால் இயக்கும்படியாக பந்தய காரை டிசைன் செய்து கொண்டார் ஆனால் சேத்தன் எனக்கு அப்படி எந்த விசேஷ அமைப்பும் வேண்டாம் வழக்கமான கார் பந்தய வீரர்கள் எப்படி காரை பயன்படுத்துவார்களோ அதே போல நானும் பயன்படுத்திக் கொள்கிறேன் என்று சொல்லி அப்படியே பயன்படுத்தி வருகிறார்.சேத்தன் தான் ஒரு கால் ஊனமுற்றவர் என்று தன்னைப் பற்றி சொன்னால் ஒழிய யாருக்கும் அது தெரியாது, ஆனால் தெரிந்த பிறகு பிரமிப்புடன் பார்ப்பார்கள், ஆனால் அந்த பிரமிப்பு பரிதாபப்பார்வையை சேத்தன் ஒரு போதும் விரும்புவது இல்லை,தனது திறமையை மட்டுமே நம்புபவர்.சொந்த மண்ணில் நடக்கும் பார்முலா கார் பந்தயத்தில் கலந்து கொண்டு ஒட்டியது பெரிதும் ஆனந்தம் என்றார்.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Lion Drsekar
அக் 17, 2024 14:13

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்பதற்கு ஒரு உதாரணம், பெயரைப்பார்த்தால் சேரநாட்டு பிள்ளையாகத் தோன்றுகிறது, எது எப்படியோ, திறமைக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கவே இருக்கும் ஒரே பத்திரிக்கை எங்கள் தினமலர், யார் சிபாரிசும் தேவையே இல்லாமல் திறமையையும் , தகுதியையும் தேடி தேடி பாராட்டும் எங்கள் மலருக்கு நன்றி வந்தே மாதரம்


முக்கிய வீடியோ