உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / வெளவால்களின் பரிதாப உலகம்

வெளவால்களின் பரிதாப உலகம்

வெளவால்கள் இயற்கையின் மிக விசித்திரமான மற்றும் முக்கியமான உயிரினங்களில் ஒன்றாகும். பாலூட்டிகளில் பறக்கும் திறன் கொண்ட ஒரே உயிரினம் இவைதான்.மேலைநாட்டுக் கதைகளில் வரும் 'டிராகுலா' உள்ளிட்ட பேய்ப் படங்களில் வெளவால்கள் கெட்ட சக்திகளின் அடையாளமாகக் காட்டப்படுவதால், அவைகள் மீது நீண்ட காலமாக மக்களிடையே பயமும் வெறுப்பும் நிலவி வருகிறது. இவை பகலில் வெளியே வராமல் இருட்டான இடங்களிலும், பாழடைந்த கட்டிடங்களிலும் தலைகீழாகத் தொங்குவதும், பார்ப்பதற்கு வித்தியாசமான தோற்றத்துடன் இருப்பதும் மனிதர்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது.இவை மனிதர்களைத் தாக்குபவை என்ற தவறான எண்ணம் பலரிடம் உள்ளது. ஆனால், உண்மையில் யாருடைய வம்புக்கும் போகாமல், மனிதர்களைக் கண்டாலே ஒதுங்கிச் செல்லும் இயல்புடைய அப்பிராணி இனமே வெளவால்கள் ஆகும்.'நிலுவையில் உள்ள எல்லா வழக்குகளையும் இவன் மீதே எழுது' என்று பிடிபடும் அப்பாவி மீது காவல் துறையினர் கூறும் நகைச்சுவையான தமிழ் சினிமா வசனத்தைப் போல, நிபா முதல் எபோலா வரை எந்தப் புதிய நோய் பரவினாலும், அதற்கு வெளவால்கள்தான் காரணம் என்று அவற்றின் மீது பழி சுமத்தப்படுவது அவற்றை மனிதர்களிடம் இருந்து மேலும் அந்நியப்படுத்துகிறது.உண்மையில், விவசாயத்தைப் பாதிக்கும் மில்லியன் கணக்கான பூச்சிகளை இவை இரவில் உண்டு விவசாயிகளுக்குப் பெரும் உதவியாக இருக்கின்றன. பழங்களைச் சாப்பிட்டுவிட்டு, அவற்றின் விதைகளை வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டு சென்று பரப்புவதன் மூலம் காடுகளை உருவாக்குவதில் மகத்தான பங்கு வகிக்கிறது. மேலும், சில வகை வெளவால்கள் பூக்களின் மகரந்தச் சேர்க்கைக்கும் உதவுகின்றன.இவ்வாறாக, உலகெங்கிலும் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளைச் சமநிலையில் வைத்திருப்பதில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இருப்பினும், மனிதர்களின் ஆக்கிரமிப்புகள், காலநிலை மாற்றம் மற்றும் தவறான புரிதல்கள் காரணமாக இந்த அமைதியான உயிரினங்கள் இன்று பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன.இந்தச் சூழலில், இத்தாலியின் ரோம் நகரில் செயல்படும் 'டுடெல்லா பிபிஸ்ட்ரெல்லி' எனப்படும் இத்தாலிய வௌவால் பாதுகாப்புச் சங்கம், இடம்பெயர்ந்த, காயமடைந்த அல்லது வாழ்விடங்களை இழந்த வெளவால்களுக்குப் பாதுகாப்பான தங்குமிடத்தையும் மறுவாழ்வையும் வழங்கி வருகிறது. மனிதர்களின் தலையீடுகள் மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயரும் அல்லது காயமடையும் வெளவால்களைத் தொண்டு நிறுவனங்களும் அறிவியலாளர்களும் மீட்டுப் பாதுகாக்கின்றனர். காயமடைந்த வெளவால்களுக்குப் பாதுகாப்பான அடைக்கலம் அளித்து, அவற்றுக்கு மறுவாழ்வு வழங்கி மீண்டும் இயற்கையான காடுகளில் விடும் பணியைச் செய்து வருகின்றனர்.வெளவால்களுக்கு எதிராக உலகமே திரண்டு நின்றாலும், அவற்றுக்கு ஆதரவாகச் சில நல்ல உள்ளங்கள் இயங்குவது சற்று ஆறுதலைத் தருகிறது.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

NALAM VIRUMBI
ஆக 10, 2026 14:32

நல்ல ஒரு உண்மை பதிவை வெளியிட்டமைக்கு நன்றி. உண்மையில் வெளவால்கள் யாருக்கும் துன்பம் கொடுப்பதில்லை. தவறான புரிதலே அவற்றின் மீது வெறுப்பு வரக் காரணம். இறைவன் படைப்பில் அவை அப்பாவிகள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை