உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / ஜெய்ப்பூரின் மங்கி மேன் விஜய் குமார் சர்மா

ஜெய்ப்பூரின் மங்கி மேன் விஜய் குமார் சர்மா

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் ஆரவல்லி மலைத்தொடரின் பின்னணியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலம் 'கல்டாஜி கோவில்'. 'கால்வ ரிஷி' என்ற முனிவர் பெயரால் கட்டப்பட்ட இந்தக் கோவில் காலப்போக்கில் 'கல்டாஜி கோவில்'என்று அழைக்கப்படுகிறது.18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவிலில் சூரிய பகவானே பிரதான கடவுள். ஆனால், காலப்போக்கில் இங்கு வாழும் ஆயிரக்கணக்கான ' குரங்குகளால், இது உலகளவில் 'குரங்கு கோவில்' என்றே அடையாளம் பெற்றுள்ளது.இந்தக் கோவில் வளாகத்திற்குள் கடந்த 20 வருடங்களாக நாள் தவறாமல் ஒரு மனிதர் வந்து கொண்டிருக்கிறார். அவர்தான் விஜய் குமார் சர்மா. அன்றாடம் 500 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் எளிய கூலித் தொழிலாளி. ஆனால், வியப்பிற்குரிய விஷயம் என்னவென்றால், தனது அன்றாட வருமானத்தில் 200 ரூபாயைத் தனியாக எடுத்து வைத்து, குரங்குகளுக்கு வாழைப்பழம், கடலை, ரொட்டி போன்ற உணவுகளை வழங்கி வருகிறார்.அவரைப் பொறுத்தவரை குரங்குகள் வெறும் விலங்கினங்கள் அல்ல; அவை நம் சமூகத்தின் ஒரு பகுதி. அதற்கும் மேலாக, அவற்றை அனுமனின் வடிவமாகக் கருதிப் போற்றுகிறார். இவரது இந்த எல்லையற்ற அன்பும் அர்ப்பணிப்பும் இவருக்கு இப்பகுதியில் 'மங்கி மேன்' (குரங்கு மனிதர்) என்ற செல்லப்பெயரைப் பெற்றுத் தந்துள்ளது.ஒரு கூடை நிறைய பழங்களுடன் சர்மா இக்கோவில் பகுதிக்கு வந்து, ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று குரல் கொடுத்த உடனே, காடுகளிலிருந்தும் மலைகளிலிருந்தும் குரங்குகள் பட்டாளம் இவரை நோக்கி ஓடி வருகின்றன. ஆனால், அங்குதான் ஒரு பெரும் ஆச்சரியம் நிகழ்கிறது. பொதுவாக உணவைக் கண்டால் சண்டையிடும் குரங்குகள், சர்மாவிடம் மட்டும் எந்தவொரு சத்தமும் சண்டையும் இல்லாமல், அமைதியாகத் தங்களுக்கான உணவைத் தரும் வரை காத்திருந்து பெற்றுச் செல்கின்றன.ஆரம்பக் காலத்தில் சர்மாவின் இந்தச் செயலை அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை. 'வறுமையில் இருக்கும் குடும்பத்தைக் கவனிக்காமல், குரங்குகளுக்கு ஏன் இவ்வளவு செலவு செய்ய வேண்டும்?' என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், நாளடைவில் இவரது சுயநலமற்ற செயலுக்குக் கிடைத்த நற்பெயரைக் கண்டு குடும்பத்தினர் தங்களது மனதை மாற்றிக்கொண்டனர். இப்போது அவருக்கு முழு ஆதரவு தருவதோடு, நேரம் கிடைக்கும் போதெல்லாம் குடும்பத்தினரும் இவருடன் வந்து குரங்குகளுக்கு உணவளிக்கிறார்கள்.தற்போது சர்மாவின் சேவை உலகிற்குத் தெரிந்ததால், பல நல்ல உள்ளங்கள் இவருக்குப் பணமாகவும் உணவாகவும் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். இதனால் முன்பை விட அதிக குரங்குகளுக்கு உணவளிக்க முடிவதாகச் சர்மா மகிழ்ச்சியோடு கூறுகிறார்.நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல, சர்மாவின் இந்தச் செயலுக்குப் பின்னால் சில அறிவியல் பூர்வமான கேள்விகளும் எழுகின்றன. 'விலங்குகள் தாமாகவே காடுகளில் உணவைத் தேடிச் சாப்பிடுவதுதான் இயற்கை. மனிதர்கள் தொடர்ந்து உணவளிப்பது அவற்றின் இயற்கை குணத்தை மாற்றி, சோம்பேறிகளாக்கிவிடும்; உணவுச் சங்கிலியைத் துண்டித்துவிடும்; மனிதர்களின் உணவுகள் அவற்றின் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும்' என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.சட்டப்படி வனவிலங்குகளுக்குப் பொது இடங்களில் உணவளிப்பதைத் தடுக்க வனத்துறைக்கு அதிகாரம் இருந்தாலும், நீண்ட காலமாகத் தொடரும் இந்த மனிதாபிமான அன்பின் வெளிப்பாட்டை அரசு தடுத்து நிறுத்தாமல் கண்டும் காணாமல் இருந்து வருகிறது. இதற்கு மற்றொரு முக்கியக் காரணமும் உண்டு; ஜெய்ப்பூர் வரும் சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பலர், இப்போது 'குரங்கு கோவிலை' விட, இந்த 'குரங்கு மனிதரைக்' காண்பதற்காகவே அதிகம் வருகை தருகிறார்கள். இதனால் ராஜஸ்தானின் சுற்றுலா வருமானமும் பெருகுகிறது.'சில விஷயங்களை ஆராயக்கூடாது, சில விஷயங்களை ஆராதிக்கக்கூடாது.'அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால், விலங்குகளுக்கு மனிதர்கள் உணவளிப்பது சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதிக்கும் என்பது உண்மைதான். எனவே, இதை நாம் 'ஆராயாமல்' கடந்து போக முடியாது. அதே நேரத்தில், 500 ரூபாய் சம்பாதிக்கும் ஒரு எளிய மனிதன், தன் பசியை மறந்து பிற உயிர்களின் பசி போக்கத் துடிக்கும் அந்தப் பேரன்பை நாம் 'ஆராதிக்காமல்' இருக்கவும் முடியாது.சுருக்கமாகச் சொன்னால், இது ஆராய்வதற்கும் ஆராதிப்பதற்கும் இடைப்பட்ட 'மனிதாபிமானத்தின் வெளிப்பாடு'.-எல்.முருகராஜ்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !