டில்லி உயிரியியல் பூங்கா மீண்டும் திறப்பு
நியூ டெல்லி மத்தியில் அமைந்துள்ள தேசிய உயிரியல் பூங்கா இயற்கையையும் மனிதனையும் இணைக்கும் ஓர் அமைதியான ஓய்விடமாக திகழ்கிறது. பழைய கோட்டைக்கு அருகிலுள்ள மதுரா சாலையில் 1959 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட இந்த பூங்கா, இந்தியாவின் மைய உயிரியல் அதிகாரம் (Central Zoo Authority) மூலம் ஒழுங்குபடுத்தப்படுகிறது. உயிரினப் பாதுகாப்பு, இனப்பெருக்கக் கடலி, கல்வி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்துவது இதன் பிரதான நோக்கமாகும்.சுமார் 176 ஏக்கர் பரப்பளவில் பரந்த இந்த உயிரியல் பூங்கா இந்திய வெப்ப மண்டலத்தின் இயற்கை வடிவமைப்பில் அமைந்துள்ளது. மரங்கள், குளங்கள், புல்வெளிகள், பறவைகளுக்கான திறந்த வெளிகள் என இயற்கையின் அங்கங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு 130க்கும் மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் வாழ்கின்றன. வெள்ளை புலிகள், ஆசிய சிங்கங்கள், ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், மான், மயில் போன்ற பிரபலமான விலங்குகள் இங்கு பாதுகாக்கப்பட்டுள்ளன.இந்த பூங்காவின் முக்கிய சிறப்பம்சம் பல்வேறு நீர்-பறவைகளின் இருப்புதான். கிரேட் ஒயிட் பெலிகான் என்ற பெரிய நீர்-பறவை இந்தியாவுக்கு விருந்தினராக வந்து இங்கு தங்கும். இதனுடன் இதர பெலிகான் இனங்களும் வருகை தருகின்றன. பெலிக்கான்களின் உணவு பெரும்பாலும் மீன்கள் மற்றும் நீரில் வாழும் சிறிய உயிரினங்களாகும். குளங்களில் கூட்டமாக உணவெடுக்கும் அவற்றின் காட்சி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும்.பூங்காவைச் சுற்றி நடைபயணம் செய்யவும் பறவைக் கண்காணிப்பில் ஈடுபடவும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நீண்ட தூரம் நடக்க முடியாதவர்களுக்கு மின்சார வாகனங்கள் வழங்கப்படுகின்றன. குடும்பங்களுக்கான ஓய்வு இடங்கள், இயற்கை குளங்கள், பசுமையான சூழல் ஆகியவை நகர வாழ்க்கையின் சத்தத்திலிருந்து தப்பித்து இயற்கையின் மடியில் சில நேரம் கழிக்க விரும்புவோருக்கான சிறந்த இடமாக இதை மாற்றியுள்ளன.பூங்கா கோடைக்காலத்தில் ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 15 வரை காலை 8.30 முதல் மாலை 5.30 வரை திறந்திருக்கும். குளிர்காலத்தில் அக்டோபர் 16 முதல் மார்ச் 31 வரை காலை 9.00 முதல் மாலை 5.00 வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் பூங்கா மூடப்படும். நுழைவு கட்டணம் இந்திய குடிமக்களுக்கு பெரியவர்களுக்கு ரூ.80, குழந்தைகளுக்கு (5 முதல் 12 வயது) ரூ.40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய உயிரியல் பூங்கா வெறும் சுற்றுலா தளம் அல்ல; அது இயற்கையின் பாடங்களை மனிதனுக்குக் கற்றுத்தரும் ஒரு திறந்த வகுப்பறை. விலங்குகளின் பன்மை, சூழலின் நுண்ணிய சமநிலை, உயிரினங்களைப் பாதுகாப்பதின் அவசியம் ஆகியவற்றை ஒவ்வொரு பார்வையாளருக்கும் உணர்த்துகிறது. நகரத்தின் நெரிசலுக்கு நடுவில் இயற்கையின் அமைதியையும் உயிர்களின் ஒற்றுமையையும் உணரச் செய்வதன் மூலம், “இயற்கையைப் பாதுகாப்பதே நம்மை பாதுகாப்பது” என்ற உண்மையை மீண்டும் நினைவூட்டுகிறது.இத்தகு சிறப்பு மிக்க இந்த பூங்கா கடந்த சில மாதங்களாக பறவை காய்ச்சல் காரணமாக பார்வையாளர்களுக்கு மூடப்பட்டிருந்தது பாவம் டில்லி வாழ் குழந்தைகள்தான் பூங்காவிற்கு வரமுடியவில்லை பிரியப்பட்ட பறவைகள் விலங்குகளை பார்க்கமுடியவில்லையே என வருத்தத்தில் இருந்தனர் அவர்களது வருத்தத்தை போக்கும் வகையில் கடந்த ஞாயிறு முதல் மீண்டும் பூங்கா திறக்கப்பட்டுவிட்டது.விலங்ககுளுக்கு வேண்டிய உணவுகள் தேடிவந்து கொடுக்கப்படுவதால் சிங்கம்,புலி போன்றவை சோம்பேறி போல பார்வையாளர்களை சட்டை செய்யாமல் படுத்தே கிடந்தது ஆனால் பறவைகள் அப்படி இல்லாமல் பழைய குழந்தை நண்பர்களைப் பார்த்த பரவசத்தில் மீன்களை துாக்கிப்போட்டு பிடித்து நீரில் சறுக்கிக்கொண்டு வந்து என்று பலவித சாகசங்களை நிகழ்த்தின.-எல்.முருகராஜ்