UPDATED : மே 14, 2026 07:18 PM | ADDED : மே 14, 2026 07:15 PM
மலைகளின் அரசியான ஊட்டியில், இதமான குளிரும் இதம் தரும் தென்றலும் வீசும் கோடை காலத்தை முன்னிட்டு, கோடை விழாவின் முதல் பெரும் நிகழ்வான 21-வது ரோஜா மலர் கண்காட்சி இன்று ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் மிகப்பொலிவுடன் தொடங்கியது.இந்த ஆண்டு கண்காட்சி, 'பறவைகளின் சொர்க்கம்' என்ற அற்புதமான கருப்பொருளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 2 லட்சம் ரோஜா மலர்கள் பயன்படுத்தப்பட்டு, பூங்கா முழுவதையும் ஒரு கற்பனை உலகமாக மாற்றியுள்ளன.கண்காட்சியின் நுழைவாயிலிலேயே சுமார் 70 ஆயிரம் ரோஜாக்களால் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்டமான அன்னப்பறவை ஜோடி, சுற்றுலாப் பயணிகளின் மனதை அள்ளும் வகையில் அமைந்துள்ளது.இயற்கை ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் கழுகு, இருவாச்சி புல் புல், பேரடைஸ் பிளை கேச்சர், தூக்கணாங்குருவி, தேன் சிட்டு, மலபார் இருவாச்சி மற்றும் நீலகிரி லாபிங் திரஷ் என 14 வகையான அபூர்வ பறவை இனங்கள் மலர் வடிவில் உயிர்பெற்றுள்ளன.சிறியவர்களைக் கவரும் விதமாகப் பிரபலமான கார்டூன் கதாபாத்திரங்களான 'ஆங்க்ரி பேர்டு' மற்றும் 'டூவிட்டி பேர்டு' ஆகிய வடிவங்களும் ரோஜாக்களால் செதுக்கப்பட்டுள்ளன.பூங்கா முழுவதும் பரவிக்கிடக்கும் 33,000 ரோஜா செடிகள், தற்போது பூத்துக் குலுங்கி மலர் கடலாகக் காட்சியளிக்கின்றன. இதில் உலகத்தரம் வாய்ந்த 4,310 அபூர்வ ரகங்கள் இடம்பெற்றுள்ளன, அவை ஒவ்வொன்றும் அதன் நிறத்தாலும் நறுமணத்தாலும் சுற்றுலாப் பயணிகளைத் தன்பால் ஈர்க்கின்றன.நேற்று தொடங்கிய இந்த கண்கொள்ளாக் காட்சியைக் காணப் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பூங்காவில் குவிந்தனர். குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, இந்த மலர் வனத்தின் அழகை அவர்கள் கொண்டாடி வருகின்றனர்.இயற்கை எழில் கொஞ்சும் இந்த ரோஜா கண்காட்சி வரும் மே 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஊட்டியில் வீசும் மெல்லிய பனியோடு, ரோஜாக்களின் வாசத்தை அனுபவிக்க இதுவே மிகச்சிறந்த தருணம்!படங்கள்:ஒய்.ஜெ.ரகு,ஊட்டி.