UPDATED : டிச 06, 2024 04:32 PM | ADDED : டிச 06, 2024 04:29 PM
சென்னை நுங்கம்பாக்கம் ஆர்ட் ஹவுசில் நேற்று துவங்கிய ஐஸ் ஆப் மெட்ராஸ் என்ற புகைப்படக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ள படங்கள் பலவும் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளன.
கடந்த 17 வருடங்களுக்கு முன் துவக்கப்பட்டு 16 ஆயிரம் உறுப்பினர்களுடன் வீறு நடைபோட்டுக் கொண்டிருப்பதுதான் 'ஐஸ் ஆப் மெட்ராஸ்' (மெட்ராஸின் கண்கள்) போட்டோகிராபி அமைப்பு.
இந்த அமைப்பில் சேர எந்தக் கட்டணமும் இல்லை,பள்ளியில் படிப்பவர்கள் முதல் எந்த வயதினரும் இந்த அமைப்பில் சேரலாம்,புகைப்படம் எடுக்கத் தெரிந்திருக்க வேண்டும் அவ்வளவுதான்.
மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையும் சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு உறுப்பினர்கள் படமெடுக்கச் செல்வர்.இப்படி எடுத்த படங்களைக் கொண்டு வருடம் ஒரு முறை புகைப்படக் கண்காட்சி நடத்திவருகின்றனர்.ஆறாவது முறையாக ஆர்ட் ஹவுசில் நேற்று கண்காட்சி துவங்கியது.கண்காட்சியினை விசாலம் சிட்பண்ட் இயக்குனர் உமாபதி துவக்கிவைத்தார்.கண்காட்சியில் 161 படங்கள் பல்வேறு தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன.மேலும் பல படங்கள் டி,வி.,மூலம் ஸ்லைடு ேஷாவாக காட்டப்படுகிறது.வருகின்ற 8 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சிக்கு அனுமதி இலவசம்,-எல்.முருகராஜ்