UPDATED : நவ 28, 2024 04:37 PM | ADDED : நவ 28, 2024 02:39 PM
சென்னை வடபழநி வியாசர்பாடி அம்பேத்கார் சட்டக்கல்லுாரி எதிரே உள்ளது கர பாத்திர சிவபிரகாச சுவாமிகள் மடாலயம்.இந்த மடாலயம் பற்றி ஒரு கட்டுரை எழுதுவதற்காக உள்ளே சென்றேன்அங்கே பல ஆச்சரியம் தரவல்ல செய்திகள் இருந்தனஅதில் ஒன்றுதான் ஸ்ரீமத் ராமனுஜ யதீஸ்வரர் ஜீவசமாதிவட மாநிலத்தில் இருந்து வந்த தேஜஸ் நிறைந்த ஒரு சுவாமியை பக்தர்கள் இங்கே வந்து தங்கச் சொல்லி கேட்டனர்,அவரும் அதன்படி இங்கே இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அவரே யதீஸ்வரர் சுவாமிகளாவார்.
வைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த அவர் தனது கனவில் தோன்றியபடி ராமானுஜர் சிலை ஒன்றை அவரே வடிவமைத்து அதனை இங்கு வைத்து வழிபாடு செய்துவந்தார்.பின் ஒரு காலகட்டத்தில் தான் விரைவில் சமாதி நிலையை அடையப்பபோவதாகவும் தனக்கு பின் இந்த இடத்திற்கு ஒரு மகான் வருவார் என்றும் அவர் இந்த இடத்தை இன்னும் சிறப்பிப்பார் என்றும் சொல்லிவிட்டு 1889 ஆம் ஆண்டு ராமானுஜர் சன்னதியினுள் சென்று அரூபமாகிவிட்டார்.அதன் பின் இந்த சன்னதி ஸ்ரீ மத் ராமானுஜ யதீஸ்வர சுவாமிகள் சன்னதி என்றே பக்தர்களால் அழைக்கப்பட்டும் வணங்கப்பட்டும் வருகிறது.இந்த சன்னதியில் உள்ள ராமானுஜருக்கு வழக்கம் போல அபிஷேகம் செய்ய வந்த அர்ச்சகர் ஒருவர் கைதவறி அபிசேக சொம்பை ராமானுஜர் மீது போட்டுவிட்டார், நீர் நிறைந்து கனமாக இருந்த அந்த சொம்பு பட்டதில் ராமானுஜரின் மூக்கு உள்ளிட்ட சிலையின் பாகங்கள் சேதமடைந்தது.
சரி பின்னமான ராமானுஜர் சிலைக்கு பதிலாக வேறு ஒன்றை இதே இடத்தில் வைத்து வழிபடலாம் என முடிவு செய்த பக்தர்கள், அதற்கான பணியை ஒரு சிற்பியிடம் ஒப்படைத்தனர்,இது என்ன சாதாரண வேலை என்று பணியை துவங்கிய சிற்பியால் ராமானுஜர் முகத்தை கொண்டுவரவே முடியவில்லை, இதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று முடிவு செய்த சிற்பி பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு போய்விட்டார்.பின்னர் ஒரு வேறு சிற்பி வேறு ஒரு சிற்பி என்று பலரிடமும் இந்த வேலையை கொடுத்த போதும் யாராலும் முடியவில்லை.காஞ்சி பெரியவரிடம் சென்ற பக்தர்கள் விஷயத்தை அவரது காதில் போட்டனர், அப்போது அவர் உன் தந்தைக்கு முகத்தில் காயம் பட்டுவிட்டால் அந்த காயத்தை சரி செய்வாயா? அல்லது வேறு ஒருவரை கொண்டு வந்து தந்தையாக வைப்பாயா?சிலையை சீர் செய்து வணங்குங்கள் என்று சொல்லிவிட்டார்.அவரது வாக்குப்படி சீர் செய்த சிலைதான் இப்போது வரை வழிபாட்டில் இருக்கிறது.-எல்.முருகராஜ்.