உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / "பனை வேர்களின் கதைகள்" புகைப்படக் கண்காட்சி

"பனை வேர்களின் கதைகள்" புகைப்படக் கண்காட்சி

புகைப்படம் என்பது வெறும் காட்சியின் பதிவு மட்டுமல்ல; அது ஒரு சமுதாயத்தின் வலியையும், உழைப்பையும், வாழ்வியலையும் பேசும் மிக வலிமையான ஆயுதம். அந்த வகையில், சென்னையில் உள்ள லலித் கலா அகாடமியில் 'பனை வேர்களின் கதைகள்' என்ற தலைப்பில் ஒரு தனித்துவமான புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. பனையேறி தொழிலாளர்களின் அன்றாட வாழ்வியலை, அவர்களின் சொந்தக் குழந்தைகளின் கேமரா லென்ஸ் வழியே உலகிற்குப் படம் பிடித்துக் காட்டும் ஓர் உன்னத முயற்சியாக இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது.சுய தொழிலின் வலிகளையும், வாழ்வாதாரப் போராட்டங்களையும் மிக நெருக்கமாகக் கண்டு வளர்ந்த விளிம்புநிலை மாணவர்களே இக்கண்காட்சியின் முதன்மைப் படைப்பாளிகள் ஆவர்.வி. ஆத்தி செல்வன், ஜெயமாலை, தங்கம், எஸ். முனீஸ் பிரபா, டி. பொன் லட்சுமி, ஜே. ஜனனி, ஜி. சக்தி, முனீஸ்வரி, எஸ். மோனிகாதான் அந்த இளம் கலைஞர்கள்.இந்தப் புகைப்படப் பின்னணியில் இருக்கும் உழைப்பு மிக முக்கியமானது. பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மற்றும் விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்குப் புகைப்படம் எடுத்தல் மற்றும் காட்சிவழிக் கதை சொல்லல் பயிற்சிகளை வழங்கும் தளமாக 'பீப்பிள்ஸ் போட்டோகிராபர் கலெக்டிவ்' செயல்பட்டு வருகிறது.இவர்களின் தொடர்ச்சியான வழிகாட்டுதல், கேமரா மற்றும் கணினி வசதிகள், தங்குமிட உதவி ஆகியவற்றின் மூலம் மாணவர்கள் தங்களின் சொந்த சமூகத்தின் வாழ்க்கையைத் தங்களின் சொந்தக் கோணத்திலேயே ஆவணப்படுத்த ஊக்கவிக்கப்படுகிறார்கள். இராமநாதபுரம், சென்னை புளியந்தோப்பு, நாக்பூர் மற்றும் ஒடிசாவின் கிராமப்புறங்களில் இத்தகைய நீண்டகால மற்றும் குறுகிய காலப் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.கண்காட்சியின் முக்கியப் பொருளும் காட்சிப்படுத்தப்பட்ட வாழ்வியலும்சாயல்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பனைத் தொழிலாளர் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக நடத்தப்பட்ட ஒன்றரை ஆண்டு காலப் பயிற்சிப் பட்டறையின் நிறைவாக இக்கண்காட்சி உருவெடுத்துள்ளது.பனை ஏறும் மக்களின் கடின உழைப்பு, அவர்களின் அன்றாட வாழ்க்கைச் சவால்கள் மற்றும் இயற்கை சார்ந்த தொழில் முறைகள் இதில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக:முதன்முறையாகப் பனைக்காடுகளுக்குள் நிகழும் குடும்பங்களின் பருவகால இடப்பெயர்வு.கருப்பட்டி தயாரித்தல், பதநீர் காய்ச்சுதல் மற்றும் பனங்கற்கண்டு உற்பத்தி.பனை ஓலைகளைக் கொண்டு செய்யப்படும் கைவினைப் பொருட்கள்.உப்புளங்களில் மக்கள் சிந்தி உழைக்கும் வியர்வையின் காட்சிகள்.விளிம்புநிலை மக்களை வாட்டி வதைக்கும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை மற்றும் பருவநிலை மாற்றத்தின் நேரடிப் பாதிப்புகள்.இவற்றையெல்லாம் தங்களின் பெற்றோர் மற்றும் சுற்றத்தாரின் உழைப்பாகக் கண்டு வளர்ந்த பிள்ளைகள், வெறும் காட்சியாகக் கடந்து போகாமல் கேமரா மூலம் வலிமையான ஆவணமாக மாற்றியுள்ளனர்.'பனை வேர்களின் கதைகள்' என்பது வெறும் புகைப்படங்களின் தொகுப்பு மட்டுமல்ல; அது பனையேறித் தொழிலாளர்களின் கண்ணீரையும், புன்னகையையும், அவர்களின் பிள்ளைகள் உலகிற்குச் சொல்லும் வரலாற்றுப் பதிவு. சமுதாயத்தின் விளிம்பில் நின்று உழைக்கும் மக்களின் நிஜ வாழ்க்கையைத் தெரிந்துகொள்ளவும், எளிய மாணவர்களின் அசாத்தியக் கலைத்திறனை ஊக்குவிக்கவும் இந்தக் கண்காட்சி ஒரு சிறந்த வாய்ப்பாகும்.கண்காட்சி நாளையுடன் (16/7/2026)நிறைவு பெறுகிறது.கண்காட்சி ஒருங்கிணைப்புாளராக பழனிக்குமார் (நிறுவனர், பீப்பிள்ஸ் போட்டோகிராபர் கலெக்டிவ்)உள்ளார் அவருடன் பேசுவதற்கான எண்:97919 66020.படம்,தகவல்:ராம்கிஷன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ