உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / பனி வாத்துக்களின் பிரம்மாண்டப் பயணம்

பனி வாத்துக்களின் பிரம்மாண்டப் பயணம்

இயற்கையின் விந்தைகளில் பறவைகளின் வலசைப் பயணம் எப்போதும் வியப்பிற்குரியது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் வட அமெரிக்கக் கண்டத்தில் நடைபெறும் பனி வாத்துக்களின் இடப்பெயர்வு, காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு பேரழகு நிகழ்வாகும்.பனி வாத்துக்கள் மிக நீண்ட தூரம் பயணம் செய்யும் வலிமை கொண்டவை. இவை குளிர்காலத்தை அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளான டெக்சாஸ், லூசியானா மற்றும் மெக்சிகோ வளைகுடாப் பகுதிகளில் கழிக்கின்றன. கோடை காலம் தொடங்கியவுடன் , இவை தங்களின் இனப்பெருக்க இடமான கனடாவின் ஆர்க்டிக் பகுதி மற்றும் அலாஸ்காவை நோக்கிப் பயணிக்கின்றன.இந்த நீண்ட பயணத்தின் இடையில், ஓய்வெடுப்பதற்கும் உணவருந்துவதற்கும் இவை தேர்ந்தெடுக்கும் மிக முக்கியமான இடம் பென்சில்வேனியாவில் உள்ள மிடில் கிரீக் வனவிலங்கு மேலாண்மைப் பகுதியாகும்.சுமார் ஒரு மாத காலம் வரை தனது இணையுடன் தங்கும் இந்த பனி வாத்துக்கள் அடுத்து பறப்பதற்கும் குஞ்சுகளை பராமரிப்பதற்கும தேவையான உடல் பலத்தை இங்கு பெருக்கிக் கொள்கின்றன.மிடில் கிரீக் நீர்த்தேக்கத்தில் சுமார் ஒரு லட்சம் பனி வாத்துக்கள் வரை வந்து இப்போது தங்கியுள்ளது.விடியற்காலையில் ஆயிரக்கணக்கான வாத்துக்கள் ஒரே நேரத்தில் வானில் எழும்பும் காட்சி, ஒரு 'வெள்ளை நிறப் பனிப்புயல்' போலத் தோன்றும். இவை கூட்டமாகச் சிறகடிக்கும் சத்தம் ஒரு ஜெட் விமானம் புறப்படுவதைப் போன்ற பிரம்மாண்டமான ஒலியை எழுப்பும்.இந்த காட்சியை பார்ப்பதற்காகவும் படம் எடுப்பதற்காகவும் ஏாராளமான பயணிகள் தற்போது இங்கு குவிந்துள்ளனர்.பனி வாத்துக்கள் முழுமையான தாவர உண்ணிகள். இவை தங்களின் பயணத்திற்குத் தேவையான சக்தியைப் பெற ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கும் மேலாக உண்பதிலேயே செலவிடுகின்றன.அருகிலுள்ள வயல்களில் அறுவடைக்குப் பின் எஞ்சியிருக்கும் சோளம், கோதுமை மற்றும் புற்களை இவை உண்கின்றன. இவை செடிகளை மேலோட்டமாக மேயாமல், களிமண்ணைத் தோண்டி வேரோடு பிடுங்கி உண்ணும் தனித்துவமான பழக்கம் கொண்டவை. இவை மணிக்கு 60 முதல் 80 கி.மீ வேகத்தில் பறக்கக்கூடியவை. சுமார் 29,000 அடி உயரத்தில் (எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்) கூட பறக்கும் திறன் கொண்டவை.காற்றுத் தடையைக் குறைத்து ஆற்றலைச் சேமிக்க, இவை வானில் ஆங்கில எழுத்தான வி வடிவில் சீராக அணிவகுத்துச் செல்லும்.இவை எப்போதுமே ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் கூட்டமாகவே வாழும்.பனி வாத்துக்களின் இந்தப் பயணம் வெறும் இடமாற்றம் மட்டுமல்ல; அது அந்தப் பறவைகளின் உயிர்வாழும் போராட்டத்தையும், இயற்கையின் துல்லியமான கால சுழற்சியையும் காட்டுகிறது. மார்ச் மாத இறுதியில் போதுமான ஆற்றலைப் பெற்றவுடன், இந்த வெண்நிறப் போர்வை மெல்ல வடக்கு நோக்கி நகர்ந்து மறைந்துவிடும்.இவை 'நான்-ஸ்டாப்' ஆகப் பறக்க விரும்புபவைதான், ஆனால் பல்லாயிரக்கணக்கான மைல்கள் கடக்க வேண்டியிருப்பதால் அவற்றின் 'எரிபொருள்' (உடல் கொழுப்பு) தீர்ந்துவிடும். மிடில் கிரீக் போன்ற இடங்கள் அவற்றுக்கு ஒரு 'பெட்ரோல் பங்க்' போலச் செயல்படுகின்றன. அங்கு தங்கி நன்றாகச் சாப்பிட்டுத் தங்களை மீண்டும் தயார்படுத்திக் கொள்கின்றன.கோடைகாலத்தில் ஆர்க்டிக் பகுதியில் முட்டையிட்டு, குஞ்சுகளைப் பொரிக்கும். ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் வடக்கில் மீண்டும் கடும் குளிர் தொடங்கும் போது, அந்தப் பனிக்குஞ்சுகளுக்குப் பறக்கத் தெரிந்திருக்கும். அப்போது தாய், தந்தை மற்றும் புதிய குஞ்சுகள் என முழு குடும்பமாக மீண்டும் தெற்கு நோக்கித் திரும்பும்.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ