உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சிந்தனைக் களம் / சிந்தனைக்ளம்: அனைத்து கட்சி குழுக்கள் வெளிநாடு பயணம் ஏன்?

சிந்தனைக்ளம்: அனைத்து கட்சி குழுக்கள் வெளிநாடு பயணம் ஏன்?

ஆப்பரேஷன் சிந்துாரின் வெற்றிக்கு பின், சர்வதேச நாடுகளை நம் பக்கம் திருப்புவதற்காக, அனைத்து கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய ஏழு குழுக்களை மத்திய அரசு திசைக்கு ஒன்றாக அனுப்பி உள்ளது. தேசம், தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு விஷயங்களில் அரசியல் வேறுபாடுகளை கடந்து, நம் நாடு ஒருங்கிணைந்து அரசின் பின் அணி திரண்டு நிற்கிறது என்ற உண்மையை உலகிற்கு உரத்த குரலில் ஒலிக்கச் செய்வது தான், இந்த குழுக்களின் நோக்கம்.

கொள்கை மாற்றம்

இந்தியா- - பாகிஸ்தான் விவகாரங்களில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் எண்ண ஓட்டத்தை மாற்றி அமைப்பதும், இந்த குழுக்களின் முக்கிய பணி. பயங்கரவாதம் உள்ளிட்ட விஷயங்களில் இந்தியா - பாகிஸ்தானை ஒரே எடையில் வைத்து பார்க்கிறது அமெரிக்கா.அமெரிக்க ராணுவ தலைமையும், சி.ஐ.ஏ., எனப்படும் உளவு அமைப்பும், தெற்காசிய விஷயங்களில் பாகிஸ்தான் பக்கமே சாய்ந்து வருகின்றன. இந்த விஷயத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், மேற்கத்திய நாடுகளின் மனநிலையை நமக்கு ஆதரவாக திருப்புவதிலும், இந்த ஏழு குழுக்கள் முக்கிய பங்கு வகிக்கும் என நம்பப்படுகிறது. அதே நேரத்தில், எதிர்காலத்தில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பாகிஸ்தானுக்கு தொடர்ந்தாலும், அதை இந்தியா கண்டுகொள்ளாது என்ற உறுதியான நிலைப்பாட்டை அழுத்தம் திருத்தமாக அவர்களுக்கு புரிய வைக்கவும் இந்த பயணங்கள் பயன்படும். பாகிஸ்தானிலிருந்து ஏவி விடப்படும் பயங்கரவாதத்தை கையாளுவதிலும், நம் கொள்கையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நமக்கு எதிராக நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு, சரியான பதிலடி கொடுக்கப்படும்என்பதை பாகிஸ்தானுக்கு புரிய வைத்துள்ளோம்.

சர்வதேச சக்தி

நமக்கு எதிராக எந்த ஒரு பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தாலும், அதன் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாகவே நம் அரசும், ராணுவமும் உறுதியாக நம்பி, அதற்கு எதிர்வினையாற்றும். பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் பாகிஸ்தான் இல்லையென்றால், அதை நிரூபிக்க வேண்டியது அவர்களது கட்டாய கடமையாகவும், தலையெழுத்தாகவும் ஆகி விட்டது. இதற்கு முன், இது போன்ற பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் பாகிஸ்தான் இருந்தது என்பதை இந்தியா நிரூபிக்க வேண்டும் என மேற்கத்திய நாடுகள் கூறி வந்தன; இனி, அது நடக்காது. மஹாபாரத கதையை ஒட்டி 'செத்தது கீசகன் என்றால், கொன்றது பீமன்' என்று ஒரு பழமொழி சொல்வர். அதுபோல, நம் நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடந்தால், அதன் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கிறது என்ற, 'நியூ நார்மல்' நிலைமையை உலக அரங்கில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து விட்டார். அதாவது, இனி வரும் காலங்களில் இஸ்ரேலை போலவே, இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதத்தின் ஆணிவேரை இந்தியா தொடர்ந்து தாக்கி அழிக்கும். அதற்கு மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை இந்தியா கண்டு கொள்ளாது.இது தான் மேலை நாடுகள் நம்மை பார்த்து பயப்படுவதற்கு முக்கிய காரணம். நேற்று வரை அடிமை நாடாக இருந்த இந்தியா எப்படி தங்களது கணக்குகளை மீறி ஒரு சர்வதேச சக்தியாக உருவெடுக்கிறது என்பது, அவர்களுக்கு இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது.

அமெரிக்க மனநிலை

தற்போது ஆப்பரேஷன் சிந்துார் வாயிலாக இந்தியாவிலேயே தயாரான 'பிரம்மோஸ்' ஏவுகணையின் செயல்திறனையும் அவர்கள் புரிந்து கொண்டு விட்டனர். இந்த ஏவுகணை ரஷ்யாவின் உதவியுடன் தயாரிக்கப்பட்டது என்றாலும், அதன் பல்வேறு செயல்திறன்களும் நம் நாட்டில், நம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டவை.இதன் வாயிலாக இந்தியாவில் தயாரான போர் ஆயுதங்களுக்கு, மூன்றாவது உலக நாடுகளில் வரவேற்பு அதிகரித்துள்ளது. இதுவும் மேற்கத்திய நாடுகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. அவர்களுடைய பணம் வாய்ந்த, பலம் வாய்ந்த ஆயுத வர்த்தகர்கள் தங்களது கொழுத்த வியாபாரம் படுத்துவிடுமோ என்றும் அச்சப்பட்டு காய்களை நகர்த்துவர். காரணம், இந்திய ஆயுதங்கள் விலை குறைந்தவை. நாம் தொடர்ந்து அணிசேரா கொள்கையை பின்பற்றுகிறோம் என்றும் முன்னர் போல் அல்லாது, புதிய அணுகுமுறை நம் வலிமையின் அடிப்படையில் அமைந்துள்ளது என்றும் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவ்வப்போது கூறி வருகிறார்.'ஐரோப்பாவின் பிரச்னைகள் மட்டுமே உலக பிரச்னை' என்ற அவர்களது காலனித்துவ மனப்பான்மை மாற வேண்டும்' என்றும், தன் சமீபத்திய ஐரோப்பிய பயணங்களின் போது அவர் கூறினார். அதை அவர்கள் ரசிக்கவில்லை. எனவே தான் தற்போதும், எப்போதும், 'இந்தியாவின் பிரச்னை தான் உலக பிரச்னை' என்று நாம் கருதி செயல்படக்கூடாது என்றும் அவர்கள் அடிக்கோடிட்டு காட்டி வருகின்றனர். கடந்த 2001ல் அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதலை தொடர்ந்து, உலகளாவிய பயங்கரவாத தாக்குதல்கள் வேறு; அவற்றின் பின்னால் இருக்கும் சர்வதேச அரசியல் வேறு என்ற அந்த நாட்டின் நிலைப்பாட்டை நாம் ஒப்புக்கொண்டோம். அவ்வாறே பிற நாடுகளும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வருகின்றன.அதே சமயம், இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களை மட்டும், அவர்கள் காஷ்மீர் பிரச்னையுடன் கலந்த பாகிஸ்தானின் எதிர் தாக்குதலாகவே பார்க்கின்றனர். எனவே, ஆப்பரேஷன் சிந்துார் உள்ளிட்ட இந்தியாவின் ராணுவ செயல்பாடுகள், அவர்களை பொறுத்தவரை காஷ்மீர் பிரச்னையுடன் சம்பந்தப்பட்டவை. 'எனக்கு வந்தால் ரத்தம்; உனக்கு வந்தால் தக்காளி சட்னி' என்ற மனநிலையே இன்னும் மேலை நாடுகளில் தொடர்கிறது. - என்.சத்தியமூர்த்தி - சர்வதேச விவகார ஆய்வாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி