நாட்டு கால்வாயில் மண்ணை கொட்டி திருநீர்மலையில் ஆக்கிரமிப்பு முயற்சி
திருநீர்மலை, திருநீர்மலை ஏரியில் இருந்து, சுப்புராயன் நகர், சரஸ்வதிபுரம் விரிவு, ரங்கா நகர் வழியாக செல்லும் நாட்டு கால்வாய் என்ற மழைநீர் கால்வாய், அடையாறு ஆற்றை அடைகிறது.மழை காலத்தில், திருநீர்மலை ஏரியின் உபரி நீர், நாகல்கேணி, பம்மல் பகுதிகளின் வெள்ளம், இக்கால்வாய் வழியாக ஆற்றுக்கு செல்கிறது.இக்கால்வாயை முறையாக பராமரிக்கவில்லை. இதனால், ஒவ்வொரு மழையின் போதும் வெள்ளம் தடைபட்டு, சரஸ்வதி புரம், சுப்புராயன் மற்றும் ரங்கா நகர் பகுதிகளை சூழ்ந்து விடுகிறது.இந்நிலையில், ரங்கா நகர், ஐந்தாவது தெருவில், கால்வாயில் மண்ணை கொட்டி ஆக்கிரமிப்பு முயற்சி நடப்பதாக, அப்பகுதிவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:நாட்டு கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முறையாக துார் வார வேண்டும். மேற்பகுதியில் மூடி போட வேண்டும் என, நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். கழிவு நீர் கலப்பதால், நிலத்தடி நீர் கெட்டுவிட்டது. இந்நிலையில், கால்வாயில் மண்ணை கொட்டி, ஆக்கிரமிக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.இதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். இல்லையெனில், இருக்கும் கால்வாயும் காணாமல் போய்விடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.