உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சிந்திப்போமா / மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய இணைய நாகரிகம்

மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய இணைய நாகரிகம்

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன்களும், கணினிகளும் மாணவர்களின் அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிணைந்துள்ளன. ஆன்லைன் வகுப்புகள், இணைய வழிக் கல்வித் திட்டங்கள், நண்பர்களுடனான வாட்ஸ்அப் குழு உரையாடல்கள் எனத் திரையில் செலவிடும் நேரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நிஜ வாழ்க்கையில் எப்படி நாம் சில ஒழுக்கங்களை கடைப்பிடிக்கிறோமோ, அதே போன்று இணைய உலகிலும் சில நடத்தை விதிகளைப் பின்பற்றுவது அவசியம். இதனை 'டிஜிட்டல் ஒழுக்கம்' அல்லது 'இணைய நாகரிகம்' என்கிறோம். ஆன்லைன் வகுப்புகளிலும் இணையக் குழுக்களிலும் பேசும் போதும், பதிவிடும் போதும் எப்போதும் கண்ணியமான மொழிநடையைக் கையாள வேண்டும். எழுத்து வடிவிலான உரையாடல்களில் முகபாவனைகளையோ, குரலின் தொனியையோ மற்றவர்களால் உணர முடியாது. இதனால் கேலியாக எழுதும் ஒரு சிறிய வரி கூடப் பெரும் தவறான புரிதலுக்கு வழிவகுத்துவிடும். எனவே எளிய, தெளிவான, பணிவான சொற்களைப் பயன்படுத்தி கருத்துகளை பரிமாறிக் கொள்வதே நல்லது. இணையத்தில் நாம் பதிவிடும் ஒவ்வொரு தகவலும் நிரந்தரமானது என்பதை மாணவர்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். நமது முழுப் பெயர், வீட்டு முகவரி, தொலைபேசி எண், குடும்ப விவரங்கள், பள்ளி முகவரி மற்றும் கடவுச்சொற்கள் போன்ற மிக முக்கியமான தனிப்பட்ட தரவுகளை எக்காரணத்தைக் கொண்டும் பகிரக் கூடாது. தேவையற்ற புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவதைத் தவிர்க்க வேண்டும். முன்பின் தெரியாதவர்களின் நட்பு அழைப்புகளையோ சந்தேகத்திற்குரிய இணைப்புகளையோ எப்போதும் கிளிக் செய்யக் கூடாது.

தயங்காமல் தெரிவிக்க வேண்டும்

சமூக வலைத்தளங்களிலும், குழு உரையாடல்களிலும் எவரையும் புண்படுத்தும் வகையிலான கருத்துகளைப் பதிவிடுவதோ, இணைய வழி மிரட்டல்களில் ஈடுபடுவதோ கூடாது. சக மாணவர்களைக் கேலி செய்வது, அவதூறுகளைப் பரப்புவது போன்றவை தவறு. இணையத்தில், மற்றவர்கள் நம்மை எவ்வாறு நடத்த வேண்டும் என்று விரும்புகிறோமோ, அதே மரியாதையை நாமும் பிறருக்குத் தர வேண்டும். ஏதேனும் தவறான பதிவுகளையோ அச்சுறுத்தல்களையோ இணையத்தில் எதிர்கொண்டால் உடனே பெற்றோரிடமோ அல்லது ஆசிரியரிடமோ தயங்காமல் தெரிவிக்க வேண்டும்.

அனைத்தும் உண்மை அல்ல

இணையத்தில் வரும் செய்திகள் அனைத்தும் உண்மை அல்ல. சமூக வலைத்தளங்களில் வரும் எந்தவொரு தகவலையும் அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் மற்றவர்களுக்குப் பகிரக் கூடாது. போலிச் செய்திகள், வதந்திகள் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தக் கூடியவை. முறையான கல்வித் தளங்கள் மற்றும் நம்பகமான செய்தி ஊடகங்களிலிருந்து பெறப்படும் உண்மையான தகவல்களை மட்டுமே பகிர வேண்டும். தொடர்ந்து பல மணி நேரம் செல்போன் திரையைப் பார்த்துக் கொண்டிருப்பது கண் சோர்வு, கவனச்சிதறல், தூக்கமின்மை போன்ற உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும். படிக்கும் நேரம், விளையாடும் நேரம், குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் ஆகியவற்றுக்கு இடையே தெளிவான வரம்புகளை வகுத்துக் கொள்ள வேண்டும். மேலும், உணவு உண்ணும் போதும் உறங்கச் செல்லும் போதும் மின்னணுச் சாதனங் களை பயன்படுத்தாமல் இருக்க, சுயக்கட்டுப்பாட்டை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !