ஆண்ட்ராய்டு 11 அப்டேட்
இந்தியாவில், மென்பொருள் இயங்குதளமான, 'ஆண்ட்ராய்டு 11' அப்டேட், தகுதி வாய்ந்த கூகுள் பிக்ஸல் போன்களில் அடுத்த வாரத்திலிருந்து கிடைக்கும் என தெரிகிறது.கடந்த வாரம் உலகளவில், இந்த அப்டேட் அறிமுகம் செய்யப்பட்டது.எனவே, இந்தியாவிலும், 'கூகுள் பிக்ஸல் 2' மற்றும் அதற்கு பின் வந்த மாடல்களில், இந்த 'ஆண்ட்ராய்டு 11' அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில், 'இ - சிம்' சம்பந்தமான சிக்கல்கள் சில இருப்பதால், உடனடியாக அனைத்து போன்களுக்கும் அப்டேட் வழங்குவது சிரமமானதாக இருப்பதாக கூறப்படுகிறது.கூகுள் நிறுவனம், சில கட்டுப்பாடுகளுடனேயே இந்தியாவில் பலவற்றை அறிமுகம் செய்துவருகிறது. 'கூகுள் பிக்ஸல் 4' மற்றும், ' கூகுள் பிக்ஸல் 4 எக்ஸ்.எல்.,' ஆகிய போன்களை, இந்தியாவில் அறிமுகம் செய்யப்போவதில்லை என அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். மேலும்,'கூகுள் பிக்ஸல் 4 ஏ' அறிமுகம் செய்யப்பட்டபோது, 'அக்டோபருக்கு முன், இந்தியாவில் அறிமுகம் செய்யமாட்டோம்' என தெரிவித்திருந்தது. இதற்கு முக்கிய காரணம், 'இ - சிம்' மற்றும் இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சேவை இவற்றுக்கிடையேயான இணைப்பு சிக்கல்கள் தான் என சொல்லப்படுகிறது.