உள்ளூர் செய்திகள்

டெஸ்லா போன் வருமா?

'ஆப்பிள், கூகுள்' நிறுவனங்களுக்கு போட்டியாக, எலான் மஸ்க், ஸ்மார்ட்போன் தயாரிக்கும் சூழல் வந்துள்ளதாக, பலர் தெரிவிக்கின்றனர். எலானும், 'அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், நிச்சயம் ஸ்மார்ட்போன் தயாரிப்பிலும் இறங்குவேன்' என கூறியுள்ளார்.அண்மையில் டுவிட்டர் செயலியை, ஆப்பிள் நிறுவனம் அதன் ஆப் ஸ்டோரில் 'பிளாக்' செய்துவிடுவதாக மிரட்டுகிறது என எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். எலான் மஸ்க் வசம் டுவிட்டர் இருந்தாலும், அதன் தலைவிதி, ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் வசம் தான் உள்ளது.ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், தங்களுடைய போனில், டுவிட்டர் செயலியை பயன்படுத்தும் வசதியை வழங்கவில்லை எனில், வாடிக்கையாளர்கள் டுவிட்டரை கைவிட்டு விட்டு, அதைப் போன்ற வேறு ஊடகத்துக்கு மாறிவிடக்கூடும்.தன்னுடைய வணிகத்துக்கான பிடி, ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் வசம் இருப்பதால், எலான் மஸ்க், சொந்தமாக ஒரு ஸ்மார்ட்போன் பிராண்டை உருவாக்கி, தயாரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அப்படி எண்ணம் எதுவும் இருக்குமா என்ற கேள்விக்கு, 'அப்படி ஒரு நிலை ஏற்படாது என நம்புகிறேன். ஆனால் அப்படி ஒரு சூழல் வந்தால், நிச்சயமாக மாற்று ஸ்மார்ட்போனை தயாரிப்பேன்' என தெரிவித்துள்ளார். 'டெஸ்லா போன்' வருவதும் வராததும், ஆப்பிளும், கூகுளும் நடந்துகொள்வதில் தான் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !