உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் /  குரூப் - 2 தேர்வு குளறுபடி: நிர்வாக ரீதியான தோல்வி!

 குரூப் - 2 தேர்வு குளறுபடி: நிர்வாக ரீதியான தோல்வி!

தமிழக அரசு துறைகளில் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர் என, பல்வேறு குரூப் - 2, 2ஏ பணிகளில், 828 காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு ஜூலை 15ல் வெளியிடப்பட்டது. முதல்நிலை தேர்வு கடந்த செப்டம்பர் 28ல் நடந்தது. அதன் முடிவுகள், டிசம்பர் 22ல் வெளியாகின. அவற்றில், குரூப் - 2 முதன்மை தேர்வுக்கு 1,126 பேர்; குரூப் - 2ஏ தேர்வுக்கு 9,457 பேர் தகுதி பெற்றனர். இவர்களுக்கான முதன்மை தேர்வுகள், தமிழகம் முழுதும் கடந்த 8ம் தேதி நடப்பதாக இருந்தது. காலையில் குரூப் - 2ஏ பொது அறிவு தேர்வும்; மதியம் குரூப் - 2, 2ஏ தமிழ் தகுதித் தேர்வும் நடப்பதாக இருந்தது. ஆனால், சென்னையில் தேர்வு மையம் ஒதுக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டது. தேர்வர்களுக்கான தேர்வு மைய விபரங்கள், ஹால் டிக்கெட்டில் தவறாக பதிவு செய்யப்பட்டிருந்தன. இதனால், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மையத்திற்கு தேர்வு எழுத வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகத்தை கண்டித்து சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், தேர்வர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, தொழில்நுட்ப கோளாறால் குளறுபடி ஏற்பட்டதாகக் கூறி, தமிழகம் முழுதும் குரூப் - 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் அறிவித்தார். அதேநேரத்தில், மாநிலத்தின் மற்ற பகுதிகளில், தேர்வுகள் துவங்கி தேர்வர்கள் எழுதிக் கொண்டிருந்தனர். இருப்பினும், டி.என்.பி.எஸ்.சி., வரலாற்றிலேயே, தேர்வு நடந்து கொண்டிருந்த போதே தேர்வு ரத்து செய்யப்பட்ட வினோதம் அன்று அரங்கேறியது. ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில், இரண்டு உதவி பிரிவு அலுவலர்கள், இரண்டு பிரிவு அலுவலர்கள், ஒரு சார்பு செயலர் ஆகியோர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். மேலும், துணை செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதி, அரசு வேலையில் சேர வேண்டும் என்பது பல ஆயிரம் பட்டதாரிகளின் கனவு. அதற்காக நிறைய பணம் செலவழித்து கோச்சிங் சென்டர்களுக்கு செல்வதுடன், ஆண்டுக்கணக்கில் இரவு பகலாக படித்தும் தயாராகி வருகின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென தேர்வுகள் ரத்து என்பது, பல ஆயிரம் இளைஞர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் செயலாகும். கடந்த 2019ல், டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப் - 4 தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிவு செய்து பலரை கைது செய்தனர். இதன்பின், தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, கடந்த பல ஆண்டுகளில் தொழில்நுட்பம் எவ்வளவோ மேம்பட்டுள்ளது. தவறுகளை தவிர்ப்பதற்கான பல வழிமுறைகள் கண்டறியப்பட்டுள்ளன. கையால் எழுதிய நுழைவுச்சீட்டு வழங்கிய காலகட்டத்தில் கூட நடக்காத தவறு தற்போது நடந்துள்ளதை பார்க்கும்போது, தேர்வாணைய அதிகாரிகளும் ஊழியர்களும் எந்த அளவுக்கு அஜாக்கிரதையாக செயல்பட்டுள்ளனர் என்பதை அறியலாம். மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் இதுபோன்ற தவறுகள், இனியும் நடக்கக்கூடாது. அதற்கேற்ற வகையில் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதோடு, மற்ற குறைபாடுகளையும் சீர்செய்வது அவசியம். அரசின் பல்வேறு துறைகளிலும், நேரடி ஆள்சேர்ப்பு என்பது அலுவலக உதவியாளர்கள், கடைநிலை ஊழியர்கள் என்ற அளவில் தான் உள்ளது. அவற்றை பெறவே, பலர் லட்சக்கணக்கில் பணம் செலவிடுகின்றனர். அதனால் தான், டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் பங்கேற்று அரசு வேலை பெற லட்சக்கணக்கானோர் முற்படுகின்றனர். எனவே, நிர்வாக ரீதியான தோல்விகளை தவிர்ப்பது கட்டாயம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Chinnamanibalan
பிப் 16, 2026 17:07

'தமிழ்நாடு தலை குனியாது' என்ற முழக்கம் கேட்பதற்கு மட்டுமே நன்றாக இருக்கிறது. ஆனால் அரசு தேர்வாணையம் நடத்தியுள்ள குழப்பம், வேலை தேடி அலையும் பல்லாயிரம் இளைஞர்களின் மன உறுதியை சீர்குலைத்து உள்ளதுடன், அரசுக்கு தலைக் குனிவையும் ஏற்படுத்தியுள்ளது.


அசோகன்
பிப் 16, 2026 12:16

தமிழகத்தை உலகத்திலேயே சிறந்த மாநிலமாக மாற்றி விட்டோம் என்று ஒருவர் கூப்பாடு போடுகிறார்... தமிழர்களை இன்னும் எவ்வளவு நாள் ஏமாற்றுவரகள் இவர்கள்


duruvasar
பிப் 16, 2026 08:06

திறனற்ற திமுக அரசில் தேர்வு ஆணையம் விதிவிலக்காயிருக்க வாய்ப்பில்லை .


ஆரூர் ரங்
பிப் 16, 2026 06:53

பெரும்பாலான தேர்வர்கள் கடன் வாங்கிக் கூட டிக்கட் எடுத்து நெடுந்தூரம் பயணித்து தேர்வுக்கு வந்து ஏமாந்துள்ளனர். நீட்டை ஒழிக்கும் முன் இந்தத் தேர்வை ஒழிக்க வேண்டும். கையாலாகாத ஊழல் திமுக நிரந்தரமாக அழிக்கப்பட வேண்டும்.


புதிய வீடியோ