உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / புற்றுநோய் மருந்து விலை குறைப்பு ஏழை நோயாளிகளுக்கு நிவாரணம்!

புற்றுநோய் மருந்து விலை குறைப்பு ஏழை நோயாளிகளுக்கு நிவாரணம்!

புற்றுநோய் சிகிச்சைக்கான, 543 வகை மருந்துகளின் அதிகபட்ச சில்லரை விலையை, என்.பி.பி.ஏ., எனப்படும், தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் திருத்தியமைத்து உள்ளது. இன்று முதல் அமலுக்கு வரும் இந்த திருத்தத்தால், முக்கிய மருந்துகளின் விலை, 70 முதல், 93 சதவீதம் வரை குறைகிறது.குறிப்பாக, மார்பக புற்றுநோய்க்கான, 'பால்போசிக்லிப்' மருந்தின் விலை, 40 ஆயிரத்து 421 ரூபாயில் இருந்து, 2,720 ரூபாயாகவும், 'கீமொதெரபி' சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும், 'தியோடெபா' மருந்தின் விலை, 80 ஆயிரத்து 72 ரூபாயில் இருந்து, 7,150 ஆக குறைந்துள்ளது. இதுதவிர வேறு சில மருந்துகளின் விலையும் கணிசமாக குறைகிறது.புற்றுநோய் மருந்துகள் விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்களின் வர்த்தக லாப வரம்பை, அதிகபட்ச சில்லரை விலையில், 30 சதவீதமாக நிர்ணயிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், மார்பக புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும், 'ரிபோக்சிக்லிப்' மருந்தின் விலை உள்ளிட்ட சில முக்கிய மருந்துகளின் விலையில் மாற்றமில்லை.புற்றுநோய் சிகிச்சையில் மருந்துகள் மட்டுமின்றி அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, மருத்துவமனை செலவுகள் என பல்வேறு செலவுகள் ஏற்படுகின்றன. எனவே, மருந்துகளின் விலை குறைப்பு, நோயாளிகளின் மொத்த சிகிச்சை செலவை கணிசமாக குறைக்கும் என, நம்பலாம். அதேநேரத்தில், இந்த திருத்தப்பட்ட விலைகள், முன்னதாக மருந்துகள் எவ்வளவு நியாயமற்ற முறையிலும், மிக அதிக விலையிலும் விற்கப்பட்டன என்பதையும் அம்பலப்படுத்தி உள்ளன.நாட்டில் அனைத்து தரப்பு மக்களிடையேயும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சிகிச்சைகளுக்கும், மருந்துகளுக்குமான அதிகப்படியான செலவு, இந்த நோய் குறித்த அச்சத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களும், மருந்து உருவாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய கண்டுபிடிப்புகளும் சமீப ஆண்டுகளில் சிகிச்சை முறைகளை மேம்படுத்தியுள்ளன; இருப்பினும், மருந்துகள் அதிக விலைக்கு விற்கப்பட்டதால், புற்றுநோய் பாதித்த நோயாளிகளும், அவர்களின் குடும்பத்தினரும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கினர் என்பதே உண்மை நிலவரம்.அதுமட்டுமின்றி, விலையை காரணம் காட்டி, பலர் முக்கியமான மருத்துவ சிகிச்சைகளை தள்ளிவைக்கவோ அல்லது தவிர்க்கவோ செய்தனர். இறக்குமதி செய்யப்படும் மற்றும் காப்புரிமை பெற்ற பெரும்பாலான மருந்துகள் சாதாரண நோயாளிகளுக்கு எட்டாத விலையிலேயே இருந்தன. எவ்வளவு தான் மருத்துவ காப்பீடு எடுத்திருந்தாலும், மருந்துகள் அதிக விலைக்கு விற்கப்படும் போது, காப்பீடு போதுமானதாக இல்லை என்ற நிலையே நீடித்தது.தற்போது, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கையால், மருந்துகளின் விலை சாமானிய மக்களும் வாங்கக்கூடிய நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம், பல லட்சம் மக்களுக்கு நீண்ட காலமாக தேவைப்பட்ட நிவாரணம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விஷயமே. மருந்துகள் விலை குறைந்துள்ளதால், விலையை காரணம் காட்டி யாரும் சிகிச்சையை தவிர்க்காமல், முழுமையாக பெற முடியும்.புற்றுநோய் சிகிச்சைக்காக பல குடும்பங்கள் தங்களின் சொத்துக்களை விற்பதும், பெரும் கடனாளியாவதும் குறையும். பலர் நோயின் ஆரம்ப நிலையிலேயே பயமின்றி மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற முன்வருவர் என்பதால், குணமடைவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.மருந்துகளின் விலை குறைப்பு என்பது நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதேநேரத்தில், விலை குறைப்பை காரணம் காட்டி மருந்துகளின் வீரியத்தையும், தரத்தையும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் குறைத்து விடாமல் இருப்பதையும், சந்தையில் தேவையான அளவுக்கு புற்றுநோய் மருந்துகள் கிடைப்பதையும், மத்திய அரசு உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும்.அத்துடன், புற்றுநோய் சிகிச்சையுடன் தொடர்புடைய பரிசோதனைகள், அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, மருத்துவ பொருட்கள் உள்ளிட்டவற்றிலும், பிற நோய்களுக்கான மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் போன்றவற்றிலும், இத்தகைய விலை குறைப்பை செயல்படுத்தினால், மக்கள் மேலும் நன்மையடைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

சந்திரசேகர்
நவ 10, 2026 08:27

அப்போ இதுவரை மருத்துவம் செய்தது காசு பார்க்கும் செயலா. ஒருத்தரின் நோயை குணப்படுத்தாமல் அதை அப்படியே வைத்து கொண்டு சாகவும் விடாமல் மருத்துவம் செய்து அவர்களின் பணத்தை கொள்ளையடிப்பது நவீன மருத்துவம்.


அப்பாவி
நவ 10, 2026 07:20

புற்று நோயைக் கூட ஒழிச்சிருவாங்க ஏழைகளை மட்டும் ஒழிக்கவே மாட்டாங்க...


Sivaagiri
நவ 09, 2026 14:32

இதுவரை நகைகளையும் சொத்துக்களையும் விற்று , ஊசி மருந்து மாத்திரை லட்சக்கணக்கில் வாங்கியவர்களுக்கு , அந்த எக்ஸ்டரா பணத்தை கணக்கிட்டு , அவர்களிடம் திருப்பி கொடுக்க சொல்ல வேண்டும் -


ஊர்குருவி
நவ 09, 2026 06:14

புற்று நோய்க்கான காரணம் எல்லோரும் அறிந்ததே .ஆனால் தவிர்க்கத்தான் முடியவில்லை .நாம் உண்ணும் உணவுகள் ,நாம் உபயோகிக்கும் இதர புகையிலை போன்ற லாகிரி வஸ்துக்கள்தான் காரணம் என்பது யாவரும் அறிந்ததே .அதை தவிர்க்க முடியாதது ஏன் என்றுதான் புரியவில்லை .சுமார் 1970 ஆம் வருடத்திற்கு முன்பு எல்லாம் இப்படி ஒரு நோய் இருப்பதே தெரிந்திருக்கவில்லை .காரணம் அதற்குமுன்பு கெமிக்கல் உரங்கள் உணவு உற்பத்திக்கு பயன்பாட்டில் இல்லை .மேலும் உணவுகள் எல்லாம் சிறுதானியவகைகளாகவே இருந்தன .மக்கள் எல்லோரும் ஆஜானுபாகுவாக 6 அடி உயரத்தில் இருப்பார்கள் .மறுபடியும் நாம் உணவு உற்பத்தியை கெமிக்கல் உரங்கள் இல்லாமல் செய்தாலொழிய இந்த உடல் பாதித்திப்பிலிருந்து மக்கள் தப்பிப்பது மிகவும் கடினமே .