உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் /  எஸ்.ஐ.ஆர்., பணிக்கு அங்கீகாரம் அளித்த தீர்ப்பு!

 எஸ்.ஐ.ஆர்., பணிக்கு அங்கீகாரம் அளித்த தீர்ப்பு!

பீஹாரில் கடந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதையொட்டி, தேர்தலை நியாயமாக நடத்தும் வகையில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இப்பணியின் போது, 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. அதன்பின், மேற்கு வங்கம், தமிழகம், கேரளா, புதுச்சேரி என சட்டசபை தேர்தல் நடக்கவிருந்த மாநிலங்களிலும், எஸ்.ஐ.ஆர்., பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த தீவிர திருத்தத்தால், தங்களின் ஓட்டு வங்கியும், கள்ள ஓட்டு போடுவதும் தடைபடும் என்பதால், தேர்தல் கமிஷனின் இந்த அதிரடி நடவடிக்கையை எதிர்த்து, அரசியல் கட்சிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை, கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் அளித்தது. 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள, அரசியல் சாசன பிரிவானது, தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் வழங்கி உள்ளது. வாக்காளர் பட்டியல் துல்லியமாக இருப்பதில் தான் ஜனநாயக முறை களின் நம்பகத்தன்மை அடங்கி இருக்கிறது. 'அதிவேக நகரமயமாக்கல், தொழில் நிமித்தமாக மக்கள் பெருமளவில் இடம் பெயர்வது, அண்டை நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுவது, இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதில் ஏராளமான குடும்பத்தினர் அக்கறை காட்டாமல் இருப்பது, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பது போன்றவை இல்லாமல், வாக்காளர் பட்டியலின் உண்மை தன்மையை உறுதி செய்ய வேண்டும் எனில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அவசியமே என்ற தேர்தல் கமிஷனின் வாதம் ஏற்கக்கூடியதே' என, தீர்ப்பில் குறிப்பிட்டது. மேலும், 'வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான தகுதியை ஆராயும்போது, ஒருவரின் குடியுரிமை குறித்து பரிசீலிக்க தேர்தல் கமிஷனுக்கு முழு அதிகாரம் உண்டு. அந்த வகையில், தேர்தல் கமிஷன் நடத்திய எஸ்.ஐ.ஆர்., பணி சட்டப்படி செல்லுபடியாகும்' என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த தீர்ப்பின் வாயிலாக, தேர்தல் கமிஷனின் செயல்பாடு குற்றமற்றது என தெரிவித்துள்ளதுடன், இதுபோன்ற விஷயங்களில் கமிஷன் சுதந்திரமாக செயல்பட முடியும் என்பதையும் உறுதி செய்துள்ளது. ஒருவரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான தகுதியை தீர்மானிக்க, ஒரு வரையறுக்கப்பட்ட விசாரணையை மேற்கொள்ள தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் உள்ளது. அத்தகைய விசாரணையானது குடியுரிமையை தீர்மானிப்பதாகாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேற்கு வங்கம் உள்ளிட்ட நாட்டின் எல்லையோர மாநிலங்களில், அண்டை நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுவோர் எண்ணிக்கை பெரும் பிரச்னையாக உள்ளது. அப்படி சட்டவிரோதமாக குடியேறுபவர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் எளிதாக சென்று விடுகின்றனர். தமிழகத்தின் திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தவர் கைது செய்யப்பட்டதே இதற்கு சான்றாகும். மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதன் வாயிலாக, உள்நாட்டு மக்களுக்காக நிறைவேற்றப்படும் நலத்திட்டங்களின் பயன்களை அவர்கள் பெறுவது தடுக்கப்பட்டுள்ளது என்றும் சொல்லலாம். அதனால் தான், மேற்கு வங்கத்தில் புதிதாக பதவியேற்றுள்ள பா.ஜ., அரசு, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அரசு சலுகைகளை இழப்பர் என்று அறிவித்துள்ளது. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதி செய்வது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். தேர்தல்கள் எதன் அடிப்படையில் நடத்தப்படுகின்றனவோ, அந்த வாக்காளர் பட்டியல் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் இருக்க வேண்டும். இதுபற்றி எந்த ஒரு தனி நபரும், அரசியல் கட்சியும் கேள்விக்கு உட்படுத்த முடியாது என்பதும், உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்தகையை முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கதே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

என்றும் இந்தியன்
ஜூன் 01, 2026 17:28

எஸ்.ஐ.ஆர் பணி தவறு என்று வழக்கு போட்ட கட்சிகள் இந்தியர்கள் அல்லவே அல்ல ஆகவே அவர்கள் இந்தியாவில் வசிக்க குடியுரிமை தரக்கூடாது என்று தீர்ப்பு இன்னும் விரிவாக எழுதப்படவேண்டும்.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 01, 2026 08:47

எந்த அரசாக இருந்திருந்தாலும் தேர்தல் கமிஷன்  எஸ்.ஐ.ஆர்., பணி செய்வதைத் தடுக்க முடியாது .... பாஜகவை எதிர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு ஜனநாயக விழுமியங்களை எதிர்க்கிறார்கள் தேசவிரோதிகள் ....


Barakat Ali
ஜூன் 01, 2026 06:26

எஸ்.ஐ.ஆர்., பணி ..... இது தங்கள் கட்சிக்கு எதிரானது என்று ப்ரொஜெக்ட் செய்த கட்சிகள் / கூட்டணிகள் தோற்றன .... கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகள் கொஞ்சம் அடக்கி வாசித்ததால் அங்கே அவர்களுக்குப் பெரிய தோல்வி இல்லை .... இனி ஆக்கபூர்வமான அரசியலே மக்கள் மத்தியில் எடுபடும் ..... அந்த ஒரு காரணத்தாலேயே காக்ரோச் ஜனதா பார்ட்டி மக்கள் மத்தியில் எடுபட வாய்ப்பில்லை .... ஆனால் பாஜக விழித்துக்கொண்டது ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை