உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / மனஅழுத்தம் போக்கும் நல்ல மருத்துவர் அம்மா: நெகிழும் கலெக்டர் சங்கீதா

மனஅழுத்தம் போக்கும் நல்ல மருத்துவர் அம்மா: நெகிழும் கலெக்டர் சங்கீதா

நல்லதொரு குடும்பப் பல்கலையின் வேந்தர் யாரென்றால் அன்னைதான் என்று திண்ணமாகக் கூறிவிடலாம். அவர் ஒருவரின் செயல்பாடால்தான் அந்த குடும்பமே சிறக்கும் என்பது வாழ்வியல் உண்மை. அந்த வகையில் தனது கல்வி, நிர்வாகம், பெருமை என அத்தனை பரிமாணங்களுக்கும் தாய்தான் தன்னம்பிக்கை ஊட்டி, ஆட்சித் தலைவியாக அமரவைத்துள்ளார் என அன்னையர் தினத்தில் நினைவலைகளில் மூழ்கி பெருமிதம் கொள்கிறார், மதுரை கலெக்டர் சங்கீதா ஐ.ஏ.எஸ்., அவர் கூறுவதைக் கேளுங்களேன்:எனது தாய் சொர்ணம். வயது 76. எட்டாம் வகுப்பு வரை படித்தவர். தென்காசி மாவட்டம் சாலைப்புதுாரில் விவசாய குடும்பத்தில் முதல் மகள் என்பதால் வீட்டு வேலைகள், உடன் பிறந்த 8 பேரை கவனித்துக் கொள்ளும்பணியை செய்து வந்தார். அப்பா சவுந்தரபாண்டியன் தபால்துறையில் அக்கவுன்டன்ட் ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.எனக்கு ஒரு அக்கா, ஒரு தம்பி உள்ளனர். தந்தை குடும்பத்தில் 10 பேர். எனது தந்தையும், ஒரு சித்தப்பாவும் படித்து அரசு பணியில் இருந்ததால் குடும்ப சொத்துக்களை உடன்பிறந்தோருக்கு கொடுத்தனர்.அம்மா, கல்விதான் சொத்து என்று கருதுபவர். அதனால் எங்களை நன்கு படிக்க வைக்க விரும்பினார். என்னை டாக்டராக்க விரும்பினார். பிளஸ் 2 முடித்தபின், பிசியோதெரபி படித்து பணியாற்றினேன். எம்.பி.பி.எஸ்., சீட் கிடைக்காததால், குரூப் 1 தேர்வு எழுதி பலதுறைகளில் பணியாற்றி ஐ.ஏ.எஸ். ஆகி கலெக்டராகி இருக்கிறேன். அம்மாவின் ஒத்துழைப்பு, வழிகாட்டலே இதற்கு காரணம். அவர் நேர்மையாளர், தைரியமானவர், மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர். மிகுந்த கனிவும், அதிக கண்டிப்பும் உள்ளவர். எங்களை அதேபோல வளர்த்தார்.

படிக்க வைத்தவர்

ஞாயிற்றுக்கிழமை என்றாலும் அதிகாலை 4:45 மணிக்கே எழுப்பி படிக்க வைப்பார். காலை 5:00 மணிக்கு பின்னர் நாங்கள் படுக்கையில் படுத்திருந்ததே இல்லை.எங்களை எந்த வேலையையும் செய்யவிடமாட்டார். சமையல், துணிதுவைப்பது என அத்தனையிலும் சுறுசுறுப்பை காட்டுவார். எங்களை யாரிடமும் விட்டுக் கொடுத்ததே கிடையாது. குடும்பத்தை தவிர வேறெதுவும் தெரியாது என்பதால் அவரது தேவை குறைவுதான். அதனால் தனக்கென எதையும் கேட்டதே இல்லை. எந்த ஊருக்கு மாறுதலாகி சென்றாலும், அங்குள்ள சிறந்த பள்ளிகளில் சேர்த்து படிக்க வைப்பார். இதனால் எனது மூத்த சகோதரி குரூப்1 தேர்வில் வென்று தற்போது வணிகவரித்துறை இணை கமிஷனராக உள்ளார். தம்பி ஐ.டி., நிறுவன ஊழியர். மூவரும் தேர்வு எழுதி நல்ல நிலைக்கு வந்ததால் அம்மாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. கடவுளே இதற்கு காரணம் என்று கூறுவார். சில நாட்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை தரிசித்தவர், வாழ்க்கை முழுவதும் கடவுளை நினைத்து நன்றி தெரிவிப்பதே தனது கடமை என்று நெகிழ்ந்து கூறினார்.

நிதானம் காட்டுவார்

நான் கலெக்டரானதும் அவருக்கு கூடுதல் மகிழ்ச்சிதான். எனது பணிச்சுமையால் வீடு திரும்பும்போது பதற்றம், படபடப்பாக பேசினாலும், என்னை நிதானமாக சமாளிப்பார். எனக்கு தனது அனுபவங்களால், 'பொறுமையாக இரு, பொது வாழ்வில் சகஜம், கடமையை சரியாக செய்தால் எதையும் சமாளிக்கலாம்' என்று ஆதரவாக கூறுவார். இதனால் நாங்கள் எந்த விமர்சனத்தையும் தாங்கும் திறன் பெற்றுள்ளோம். தினமும் என்னைப் பற்றி பத்திரிகைகளில் படித்து அதுபற்றி பேசுவார்.அவரது நிதானம், தைரியத்துக்கு ஓர் உதாரணம் சொல்லியாக வேண்டும். நாங்கள் அம்பாசமுத்திரத்தில் இருந்தபோது நான் 4 வயது சிறுமி. அக்காவுக்கு இரண்டரை வயது கூடுதல். தம்பி 2 வயது. இரவில் மாடியில் இருந்து விழுந்த தம்பியின் தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. அதைப் பார்த்து அப்பா மயங்கிவிட்டார்.அந்த நிலையிலும் எனது அம்மா தைரியமாக தந்தைக்கு முதலுதவி செய்து, என்னையும், அக்காவையும் அழைத்துக் கொண்டு தம்பியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தார். ரொம்ப ஸ்ட்ராங்க் பெர்சன் என் அம்மா. அவருக்கு இருந்த தைரியத்தை எங்களுக்கும் ஊட்டி வளர்த்துள்ளார்.இப்போதும் எங்களை குழந்தையைப் போலத்தான் கருதுவார். நான் வீட்டிலோ, உறவினரிடமோ தவறை அறிந்து கண்டித்து படபடப்பாக பேசினால், எனது எமோஷனை கன்ட்ரோல் செய்யும் பண்பும் அவரிடம் இருக்கிறது. இவ்வகையில் மனஅழுத்தத்திற்கு நல்ல மருத்துவராக இருக்கிறார் அம்மா. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

selvaraj Shree
மே 13, 2025 21:24

திமுக விசுவாசியாக....மக்கள் பாவம்


selvaraj Shree
மே 13, 2025 21:21

மனு செய்து 10 மாதங்கள் கடந்தும் தகவல் இல்லை... இந்த மாதம் சம்பளம் வந்துவிட்டதா உங்களுக்கு...


selvaraj Shree
மே 13, 2025 21:18

நீங்கள் எங்கள் மதுரைக்கு ஆட்சியராக வந்ததிலிருந்து எங்களுக்கு மனஅழுத்தம்தான்.... உங்களுக்கு அனுப்பிய மனு 10 மாதங்களாக காணாமல் போய்விட்டது... தகவல் அறியும் உரிமை சட்டத்திலும் பதில் இல்லை, முதலமைச்சர் தனிபிரிவு பதில் இல்லை... கொடுமை தலையெழுத்து


Bhaskaran
மே 13, 2025 16:29

உங்கள் தாயாருக்கு நமஸ்காரங்கள்


சுந்தரம் விஸ்வநாதன்
மே 11, 2025 16:32

இப்படிப்பட்ட தெய்வம் போன்ற அம்மாவால வளர்க்கப்பட்ட நீங்கள் எப்படி கழக உடன் பிறப்பு ஆனீர்கள்?


MAPASE
மே 11, 2025 09:23

அருமையான அம்மா.


முக்கிய வீடியோ