உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி /  மோர் + ரசம் = முன்னேற்றம் - முருகபாரதியின் தன்னலமற்ற பயணம்

 மோர் + ரசம் = முன்னேற்றம் - முருகபாரதியின் தன்னலமற்ற பயணம்

பெற்றோர் கண்ணன், விஜயலட்சுமி இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள். எனது வாழ்வில் பெரும் பங்கு அம்மாவுக்கு உண்டு. பண்பு, நிதானம் உள்ளிட்ட முக்கிய குணங்கள் அவரிடமிருந்து பெற்றதால் இனிஷியலில், அவர் பெயரையும் சேர்த்துக் கொண்டேன்.சிறுவயதில் அப்துல் ரஹிம் எழுதிய 'கோடீஸ்வர கொடை வள்ளல்' புத்தகத்தை அப்பா வாசிக்க கொடுத்தார். உலகின் பணக்காரர்களுள் ஒருவரான ஆன்ட்ரூ கார்நிகி எனும் தொழிலதிபர், 40வது வயதில் தனது 95 சதவீத சொத்துகளை அறக்கட்டளைக்கு வழங்கியதன் மூலம் அவரது பெயரில் உலகம் முழுதும் 3200 நுாலகங்கள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. அதன் தாக்கம் எனக்குள் ஏற்பட்டது. சமூக சேவை செய்ய குடும்பம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக திருமணம் வேண்டாம் என 22 வயதிலேயே முடிவெடுத்தேன்.

பட்டங்களும், பயிற்சியாளர் பணியும்

படிப்பதில் ஆர்வம் அதிகம். ஐ.ஏ.எஸ்., கனவும் இருந்தது. பி.காம்., கல்லுாரியில் பயின்றேன். வீட்டில் வசதி இல்லாததால் எதில் எல்லாம் விருப்பம் இருந்ததோ அதை படிப்பாக மாற்றினேன். எம்.காம்., எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.பி.ஏ., உள்ளிட்ட 8 பட்ட மேற்படிப்புகளை தொலைதுார கல்வியில் பயின்றேன். 9 வயதில் இருந்தே பட்டிமன்றம், மேடைகளில் பேசுவது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டேன். 2004ல் புதுக்கோட்டையை சேர்ந்த மனிதவள பயிற்சியாளர் கிருஷ்ண வரதராஜன், ஒரு நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் பேச அழைத்தார். அப்போது அவர் களிடத்தில் ஏற்படும் மாற்றங்களை கண்கூடாக பார்க்க முடிந்தது. அதை உணர்ந்து 'என்னுடைய துறை இதுதான்' என தீர்மானித்தேன். பி.காம்., முடித்ததும் ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் என்ற அமைப்பில் மனிதவள பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றேன். தற்போது 22 ஆண்டுகளாக முழுநேர மனிதவள பயிற்சியாளராக இருக்கிறேன். இலவசமாக கிடைப்பதால் அறிவுரைகளுக்கு மதிப்பில்லை. சரியான நேரத்தில் அறிவுரை கிடைக்காமல் பலர் கஷ்டப்படுகின்றனர். அறிவுரையை சுவாரஸ்யமாக கூற வேண்டும். உதாரணமாக, காலதாமதமாக வந்தால் விளைவுகள் என்ன என்பதை மட்டும் கூறி, முடிவை அவர்களே எடுப்பதற்கான உத்வேகத்தை கொடுப்பேன். அதுவே என் பாணி. இதுவரை 2 கவிதை தொகுப்புகள் உட்பட 11 சுய முன்னேற்ற நுால்களை எழுதியுள்ளேன். குறிப் பாக 'மோர் + ரசம் = முன்னேற்றம்' என்ற நுால் கவனம் பெற்றது. ஆங்கிலத்தில் 'மோர்' என்றால் அதிகம். ரசம் - ரசனையை குறிக்கும். வாழ்வில் எந்த விஷயத்தையும் அதிக ரசனையுடன் செய்தால் முன்னேற்றம் கிடைக்கும் என்ற அர்த்தத்தில் எழுதினேன்.

சமூகப்பணி

இதுவரை 3 லட்சம் பேருக்கு பயிற்சியளித்துள்ளேன். அதில் நெருங்கிய 13 பேருடன் 2020ல் 'நீதான்' எனும் அறக்கட்டளை தொடங்கினேன். ஈட்டும் வருமானத்தை சமூக சேவைக்கு பயன்படுத்திவிடுவேன். அறக்கட்டளை மூலம், 3 மாணவர்கள் மேற்படிப்பு பயில்கின்றனர். அடுத்தவர்களுக்கு உதவும் மனம், நாட்டுப்பற்று, மொழிப்பற்று உள்ளிட்டவை அப்பாவிடம் இருந்து வந்தது. அவர், பாரதியாரின் பித்தன். பாரதியார் 39 ஆண்டுகள் தன் வார்த்தைக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி இன்றி வாழ்ந்த கவிஞன். 'உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாம்' என்றார். அதன்படி வாழ்வில் எதை பின்பற்றுகிறேனோ அதையே பிறருக்கு போதிக்கிறேன். 2008ல் 'கவிராசன் இலக்கிய கழகம்' என ஆரம்பித்து 18 ஆண்டுகளாக பாரதியின் பிறந்த நாளை இலக்கிய விழாவாக கொண்டாடுகிறோம்.

நேரத்தை பயன்படுத்துங்கள்

நேரம் பொன் போன்றது என்பர். எனக்கு உயிர் போன்றது. பலர் நேரத்தை மேலாண்மை செய்ய முயல்வதால் மன அழுத்தத்துடன் காணப்படுகின்றனர். மேலாண்மை செய்வதை விட நேரத்தை பயன்படுத்த வேண் டும். கையைமீறி நடக்கும் விஷயங்களை விட கிடைக்கும் நேரத்தை பயன்படுத்துவதில் கவனம் செலுத்துவேன். இதனால் 'டென்ஷன்' இன்றி நினைத்தவற்றுக்கெல்லாம் நேரம் ஒதுக்க முடிகிறது. இன்றைய தலைமுறையிடத்தில் 'உணர்வு மேலாண்மை' இல்லை. கேட்டவுடன் கிடைத்துவிடுவதால் எதன் மீதும் ஆர்வமில்லாமல் வாழ்கின்றனர். பெற்றோர், ஆசிரியர்கள் என இருவருக்கும் இதில் பங்குண்டு. பாடம் நடத்துவதை விட கற்றுக் கொள்வதற்கான பசியை ஆசிரியர்கள் துாண்ட வேண்டும். பெற்றோர், அறிவுரையை வெறும் வார்த்தைகளால் கூறாமல் அவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருந்து, உத்வேகத்தை கொடுத்தால் தானாகவே பின்பற்றுவர். வாழ்வில் எது நடந்தாலும் 'அதனால் என்ன? அடுத்தது என்ன?' என்ற மந்திரத்தை பின்பற்றினால் எவ்வித சிக்கல்களையும் கடந்துவிடலாம். இவ்வாறு பகிர்ந்தார். தொடர்புக்கு 80565 22115


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை