தொழில்வாய்ப்பு மணக்குது மலரியல் துறை வழிகாட்டுது
ம லர் சாகுபடித் துறையில் தொழில்முனைவு வாய்ப்புகள் ஏராளம் உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள, குறு, சிறு விவசாயிகள், மகளிருக்கு வழிகாட்டத் தயாராக இருப்பதாக, வேளாண் பல்கலை மலரியல் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, வேளாண் பல்கலை மலரியல் துறை தலைவர் கங்கா 'தினமலர்' இதழுடன் பகிர்ந்து கொண்டதாவது: உலகளவில் மலரியல் சந்தையில், இந்தியாவின் பங்களிப்பு ஒரு சதவீதம் மட்டுமே. சமீபத்தில் இத்துறை அதிக கவனம் பெற்று வருவதால், ஆண்டுக்கு 12 சதவீதம் என அதி வேகத்தில் வளர்கிறது. இந்திய அளவில் 3 லட்சம் ஹெக்டர் பரப்பில் மலர் சாகுபடி நடக்கிறது. இதில், உற்பத்தி மற்றும் பரப்பளவில் தமிழகத்தின் பங்கு 20 சதவீதம். உதிரி மலர், கொய்மலர், தனித்துவம் மிக்க கொய்மலர்கள் என மூன்று விதங்களில் மலர் சாகுபடி, தொழில் வாய்ப்புகள் உள்ளன. இந்த மூன்று பிரிவிலும் ஏராளமான தேவை உள்ளது. மூலப்பொருளுக்கும், மதிப்புக் கூட்டி விற்பதிலும் ஏற்றுமதி வாய்ப்புகளும் உள்ளன. குறு, சிறு விவசாயிகளைப் பொறுத்தவரை, பயன்படாத நிலங்களிலும் 500 சதுர மீட்டர் இடமிருந்தால் போதும். பசுமைக் குடில் அமைத்து ரோஜா, அந்தூரியம், ஜெர்பரா, ஆர்கிட், அலங்கார இலை மற்றும் தழை தாவரங்களை வளர்க்கலாம். இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். வீடுகளில், மாடித்தோட்டத்தில், நிழல் வலை அமைத்து, அலங்கார இலை தழை தாவரங்களை வளர்க்கலாம். வெயிலின் அடர்த்தி குறைவாகவும், வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரையும் குறைவாகவும், ஈரப்பதம் சற்று அடர்த்தியாகவும் இருக்க வேண்டும். அஸ்பெராகஸ், அக்லோனிமா, டைபன்பேக்கியா, பெப்ரோடியா, டிரசீனா உள்ளிட்ட ரகங்களை வளர்த்து விற்பனை செய்யலாம். விழாக்கள், வழிபாட்டுத் தலங்கள், நிலம் எழிலூட்டும் துறை, உணவுத் தேவை, மருத்துவம், இயற்கை நிறமிகள் என பல்வேறு தரப்பிலும் மலர்கள் மற்றும் அழகிய இலை தழைகள் தேவைப்படுவதால், மிகப்பெரிய தேவை இருந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில், நேரடி உற்பத்தியாளராகவும், மதிப்புக் கூட்டி விற்பனை செய்பவராகவும், தொழில்முனைவு வாய்ப்புகள் உள்ளன. வேளாண் பல்கலையின் மலரியல் துறை சார்பில், இதற்காக பயிற்சி வகுப்புகள் மாதம்தோறும் நடத்தப்படுகின்றன. இப்பயிற்சி வாயிலாக சேர்ந்தால், தொழில்நுட்ப உதவிகள் உட்பட அனைத்துப் பயிற்சிகளும் வழங்க தயாராக உள்ளோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.