ஓவியத்தில் அசத்தும் அரசுப்பள்ளி மாணவர்
தி ருப்பூர், செட்டி பாளையம் அரசுப்பள்ளி யில் படிக்கும் ஏழாம் வகுப்பு மாணவன் அஜய் பிரவின், ஓவியக்கலையில் கைதேர்ந்தவராக இருக்கிறார். விளையாட்டாக ஆரம்பித்து, விளையாடியது போக மீதமுள்ள நேரத்தில் வரையத் துவங்கிய இவரது ஓவியம் இன்று அனைவரையும் கவர்கிறது. ஓவியம் வரைதல் குறித்து அவர் கூறியதாவது: நான் மூன்றாவது படிக்கும்போது எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் வந்தது. வரையலாம் என்று சும்மா வரைந்து பார்த்தேன், அது நன்றாக இருந்தது. அப்பாவும் அம்மாவும் ஊக்குவித்தனர். அதனால், ஓவியப்பயணத்தை துவங்கினேன். பள்ளி விடுமுறை நாட்களில் விளையாடியது போக வீட்டில் மீதமுள்ள நேரத்தில் வரைந்து பார்ப்பேன். இயற்கை காட்சி, சுவாமி படங்கள், கருத்துப்படங்கள், பொம்மைகள் போன்றவற்றை நன்றாக வரைவேன். பள்ளி விழாக்கள், போட்டிகள், ஆண்டு விழா, புத்தக திருவிழா போன்ற பல இடங்களில் நடந்த போட்டியில் கலந்துகொண்டேன், பரிசும் பதக்கங்களும் பெற்றிருக்கிறேன். புதிய ஓவியங்களை தினமும் வரைந்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார். பென்சில்களும், கிரேயான்களும் சேர்ந்து அழகிய உருவங்களாகிறது. சரியான வழிகாட்டலும் ஊக்கமும் கிடைத்தால், இவர் எதிர்காலத்தில் சிறந்த ஓவியராக வருவார். இளம் வயதில் வெளிப்படும் இத்தகைய திறமைகளை ஆதரித்து வளர்ப்பது இன்றைய சமூகத்தின் கடமை.