உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / மனநலத்தை மீட்கும் மாயக்கலைகள்

மனநலத்தை மீட்கும் மாயக்கலைகள்

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு என்றால் அதில் மனநலத்தை மீட்டெடுக்கும் மாயக்கலைகளாக கைவினைப்பொருட்கள் வடிவமைப்பை சொல்லலாம். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மனநோயாகி சிகிச்சை பெற்று மீளும் நோயாளிகளின் முதல் மறுவாழ்வு என்பதே அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி நோயின் தன்மையை மடை மாற்றுவது தான் என்கிறார் மாநில மனநல திட்ட அலுவலர் டாக்டர் ராமசுப்ரமணியன்.இலவச மருத்துவமனைகளின் மூலம் பல்வேறு மாவட்டங்களில் மனநோயாளிகளுக்கு சிகிச்சையும் வேலைவாய்ப்பும் வழங்கி வரும் டாக்டர் ராமசுப்ரமணியன் சிகிச்சை அனுபவங்களை விவரிக்கிறார். ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி யாருக்கும் மனநோய் வரலாம். அவர்களின் நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் முழுமையாக குணப்படுத்தலாம். குணப்படுத்திய பின் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களை அப்படியே விட்டு விடமுடியாது. பொருளாதாரம் இல்லாவிட்டால் சிகிச்சை முழுமையடைந்ததாக கூறமுடியாது. எனவே அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க மதுரையில் பிஸ்கெட், பிரெட், குக்கீஸ் தயாரிக்கும் பேக்கரி ஆரம்பித்தோம். அப்படியே பிரின்டிங் பிரஸ், டெய்லரிங் யூனிட் என விரிவுபடுத்தினோம்.மனநோயில் இருந்து மீண்டவர்களுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு தருவதால் பொருளாதார பிரச்னையில் இருந்து தப்பிக்கின்றனர். வீட்டிலும் அவர்களுக்கான மரியாதை கிடைக்கிறது. சராசரி மனிதர்களைப் போல உடனடியாக இவர்கள் பயிற்சியில் தேர்ந்து விட மாட்டார்கள். மெல்ல புரியவைத்து கற்றுக் கொடுத்தால் வேறு சிந்தனையின்றி வேலையை மட்டும் பார்ப்பார்கள். இதுதான் இவர்களின் தனிச்சிறப்பு. இவர்களின் கைவண்ணத்தில் ரப்பர் தயாரிப்பு தொடங்கி சணல் பை, தாம்பூல பை, ஹேண்ட் பேக், சலங்கை வைக்கும் பை, பைல் என நிறைய தயாரிக்கிறோம். இவற்றை வாடிக்கையாளர்கள் வாங்கும் போது இவர்களின் வாழ்வின் மலர்ச்சி ஏற்படுகிறது. இதுதான் அவர்களுக்கான உண்மையான சேவை என்றார்.பேக்கரி பொருட்கள், டெய்லரிங் தயாரிப்புகளை வாங்க வேண்டுமா. 97891 27746 ஐ அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை