உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / ஆண்டு 55; மேடை 3000 ; தலைமுறை 3

ஆண்டு 55; மேடை 3000 ; தலைமுறை 3

அன்றைய தலைமுறை முதல் இன்றைய தலைமுறை வரை பெரியவர் முதல் சிறியவர் வரை அனைத்து தரப்பினரையும் கட்டி போட்டு வைத்திருக்கிறது சினிமா. அதற்கு முன்னோடியானது நாடகம். அந்த நாடகத்துறையில் 55 ஆண்டுகளில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களை ஏற்றியிருக்கிறார் என்றால் பாராட்டாமல் இருக்க முடியாது. நாடக கலைஞரான தந்தை வழியில் நாடகத்துறையில் கலக்கி வருகிறார். மூன்றாவது தலைமுறையாக அவரது மகன், மருமகளும் நாடகத்துறையில் கலக்க துவங்கியிருப்பது இத்துறையில் அவர்கள் குடும்பத்திற்கு இருக்கும் ஈடுபாடு அல்லாது வேறு ஏதுவாக இருக்க முடியும். இப்பெருமைகளுக்கு சொந்தக்காரர் தான் நாடக ஆளுமை ரத்தினம். தந்தை கூத்தபிரான் சிறந்த நாடகக் கலைஞர். தற்போது ரத்தினத்தின் மகன் விக்னேஷ், மருமகள் சுவாதியும் நாடகங்களை அரங்கேற்றி வருவது பாராட்டுக்குரியது. ஏழு வயதிலேயே தந்தை கூத்தபிரானின் ஆத்மார்த்த நண்பரான நடிகர் ஜெய்சங்கர் அழைப்பில் ‛நவாப் நாற்காலி' என்ற திரைப்படத்தில் நடிக்கத்துவங்கியவர், 55 ஆண்டுகளாக ஒரு சில திரைப்படங்களோடு, மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறார். ‛உன்னால் முடியும் தாத்தா' என்ற நாடகத்தில் தந்தை கூத்தபிரான், மகன் விக்னேஷூடன் இணைந்து நடித்தது இறைவன் அளித்த வரம் எனவும் நெகிழ்ச்சியுறுகிறார் ரத்தினம். தினமலர் சண்டேஸ்பெஷலுக்காக அவர் தொடர்ந்து மனம் திறந்ததாவது... அப்பாவின் நாடகங்களில் நடிகர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அந்த நாடகங்களை பார்க்க நானும் சிறுவயதிலேயே போவேன். இதனால் நாடகக்கலை மீது சிறு வயதிலேயே ஒரு ஈர்ப்பு இருந்தது. இந்நிலையில் தான் ஜெய்சங்கர் தான் நடித்த நவாப் நாற்காலி படத்தில் சகஸ்ரநாமம் காந்திமதி தம்பதியின் பத்து குழந்தைகளில் கடைகுட்டியாக நடிக்க அழைத்தார். முதல் பையனாக நடிகர் நாகேஷ் நடித்தார். அந்த படத்தில் நான் பேசிய வசனம் நல்ல வரவேற்பையும் பெற்றது. பிறகு நடிகர் வி.எஸ்.ராகவனின் குரூப்பில் இணைந்து நாடகங்களில் நடித்து வந்தேன். ராஜா வீட்டு கண்ணுக்குட்டி என்ற நாடகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்தேன். நடிகை மனோராமாவுடன் இணைந்து இந்தியா டூடே உள்ளிட்ட நாடகங்கள், நடிகர்கள் ஸ்ரீகாந்த், பூர்ணம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் குரூப்பில் இணைந்தும் நடித்தேன். அதன் பிறகு தான் சுயமாக நாடகங்களை இயக்கி நடிக்கவும் துவங்கினேன். இதற்கிடையில் சி.எம்.சி., என்ற தனியார் நிறுவனத்திலும் பணியில் சேர்ந்தேன். பணிபுரிந்தபடி ஓய்வு நாட்கள், மாலை நேரங்களில் நாடகங்களில் நடித்தும் வந்தேன். அந்த கம்பெனி தான் பின்னர் டி.சி.எஸ்., என பெயர் மாற்றம் பெற்றது. தற்போது ஓய்வு பெற்றதால் முழுமூச்சாக நாடகங்களில் ஆர்வம் காட்ட முடிகிறது. ஜேஷ்டகுமரா, ரூபாய் இருபத்தியொன்னு, உன்னால் முடியும் தாத்தா, ஒரு ரோபோவின் டைரி, சொப்பன குழந்தை, காளீஸ்வரா பவனம், சதுரங்கபார்வை, பட்டாம்பி, சீதாபதி என பல நாடங்களை எழுதி இயக்கி நடித்திருக்கிறேன். என் நாடகங்கள் இந்தியாவில் மட்டுமின்றி சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அரங்கேற்றப்பட்டுள்ளன. 55 ஆண்டுகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளில் நாடகங்கள் அரங்கேறியுள்ளது. சுருக்குப்பை என்ற நான் எழுதி இயக்கி நடித்த நாடகம் நடத்தும் போதொல்லாம் மக்களிடம் கிடைத்த வரவேற்பும், பாராட்டும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. சுருக்குப்பை நாடக ஸ்கிரிப்ட்டை 2017 ல் நடிகர் ரஜினி பார்த்து படித்து பாராட்டியதை மறக்க முடியாது. அவரை சந்தித்திலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. நடிகை மனோராமாவின் 1980 காலகட்டத்தில் இந்தியா டூடே என்ற நாடகத்தில் நான் சிறுவனாக நடித்தேன். அந்த நாடகத்தை பார்க்க விரும்பிய நடிகர் ரஜினி வந்து மேடை ஓரத்தில் சேரில் அமர்ந்து முழுவதுமாக பார்த்ததுடன், நாடகம் முடிந்ததும் மனோராமா உள்ளிட்ட அனைத்து நடிகர்களையும் அழைத்து பாராட்டினார். அப்போது சிறுவனாக நடித்த என்னை அழைத்துள்ளனர். ஆனால் நான் மேக்அப்பை கலைந்து விட்டு செல்வதற்குள் அவர் சென்று விட்டார். இதனால் அவரை சந்திக்க முடியாமல் ஏமாற்றமடைந்தேன். இதனை 2017 ல் ரஜினியை சந்தித்த போது தெரிவித்தேன். அவரும் முப்பதாண்டுகளுக்கு பிறகும் நினைவில் வைத்திருந்து நாடக பெயரை குறிப்பிட்டு நீங்கள் தான் சிறுவனாக நடித்ததா என வியந்து பாராட்டினார். அவரது நினைவற்றால் அபாரம். அவரது ரசிகனான நான் அவரது வேட்டையன் படத்திலும் சிறிய கேரக்டர் செய்து இருக்கிறேன். முத்ரா சபாவில் என் சதுரங்கபார்வை நாடகத்தை பார்த்து ரசித்த சபா நிர்வாகிகள் ராதா, அவரது கணவர் பாஸ்கர் மேடையிலேயே நாடக முத்ரா என்ற விருதை எனக்கு வழங்கி பாராட்டினர். இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் எவ்வளவோ ‛டைம்பாஸ்' அம்சங்கள் வந்து விட்டன. நாம் தான் வரும் தலைமுறையினருக்கும் நாடகக்கலையை கொண்டு சேர்க்க வேண்டும். பரதநாட்டியம், வாய்ப்பாட்டு போன்று நாடகங்களையும் தொடர்ந்து பல மணி நேரம் பார்வையாளர்களை தொய்வின்றி பார்த்து கொண்டிருக்க செய்ய வேண்டும். அப்படி என்றால் எந்தளவுக்கு நாம் ஈடுபாடு காட்ட வேண்டும் என்பது முக்கியம். திருவனந்தபுரத்தில் அக்., 1 முதல் 111 நாட்கள் நடக்கும் சூர்யா திருவிழாவில் என் மகனின் லீலா வினோதம், என்னுடைய வீரா நாடகங்கள் அரங்கேற்றப்பட இருக்கின்றன என்றார் உற்சாகமாக. இவரை வாழ்த்த 94441 85013 மேஷ்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை