உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / ராணுவ வீரர் ராமருக்கு ராயல் சல்யூட்

ராணுவ வீரர் ராமருக்கு ராயல் சல்யூட்

இந்திய தேசத்தின் நலன் காக்கவும், அனைவருக்கும் தேச உணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் செயல்படுகிறார் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே காக்கூர் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராமர் 45.ஓய்வு பெற்ற கையோடு முதுகுளத்துார் பகுதி இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் வாங்கி மைதானம் அமைத்து இலவச பயிற்சி அளித்து வருகிறார். இவருக்கு புளியங்குடி முன்னாள் ராணுவ வீரர் கருப்புசாமி உதவியாக உள்ளார். ராமர் 22 ஆண்டுகளும், கருப்புசாமி 30 ஆண்டுகளும் ராணுவத்தில் பணியாற்றி உள்ளனர்.முதுகுளத்தூர் பகுதியில் மைதானம் இல்லாமல் ராணுவம், போலீஸ் வேலைக்கு செல்ல இளைஞர்கள் ரோட்டோரங்களில் உடற்பயிற்சி செய்வதை பார்த்துள்ளார் ராமர். இதனால் வேதனை அடைந்து, முதுகுளத்துார் நீதிமன்றம் அருகே சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் வாங்கி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மைதானம் தயார் செய்து பயிற்சி அளிக்கிறார்.ராமர் கூறியது: முதுகுளத்துார் வானம் பார்த்த வறண்ட பூமி. இங்கு போதிய அடிப்படை வசதிகள், மைதானம் இல்லாமல் இளைஞர்களுக்கு திறமைகள் இருந்தும் ராணுவத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுவதை காண முடிந்தது. இதனை போக்கும் வகையில் சீமை கருவேலம் அடர்ந்த இடத்தில் நிலத்தை வாங்கி மைதானம் தயார் செய்துள்ளேன். இளைஞர்களுக்கு ராணுவத்தில் சேர பயிற்சி அளித்து வருகிறேன்.உறவினர் கருப்புசாமி எனக்கு உறுதுணையாக இருக்கிறார். 2019 -20ம் ஆண்டுகளில் கொரோனா காலத்தில் துவக்கப்பட்ட இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 80க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ராணுவம், கடற்படையில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.இங்கு காலை, மாலை இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. ஓட்டம், கயிறு ஏறுதல், உயரம், நீளம் தாண்டுதல், தண்டால் எடுத்தல் ராணுவத்தில் சேர அனைத்து பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.வாரம் ஒரு முறை ஓட்டப்பந்தயம் நடத்தி, கணக்கீடு செய்யப்படுகிறது. எழுத்து தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது என்றார்.கருப்புசாமி கூறுகையில், 'இளைஞர்கள் அலைபேசி, டிவியில் மூழ்காமல் ஆர்வமாக பயிற்சியில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.ஒரு அடி இடம் கொடுக்காமல், நில தகராறு, வழக்குகள் நடக்கும் நிலையில், ஒரு ஏக்கர் நிலத்தை மைதானம் அமைக்க ஒதுக்கி இலவச பயிற்சி அளித்து வரும் ராணுவ வீரர் ராமருக்கு ராயல் சல்யூட்!இவரை பாராட்ட 88700 75409.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை