உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / படிக்காத பாட்டி படிக்க வைத்தார்

படிக்காத பாட்டி படிக்க வைத்தார்

1947 திருப்பூரில் ஒரு விதை விழுந்தது. ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளி என்ற பெயரில். அந்த விதை இன்று 75 ஆண்டு ஆலமரமாக வளர்ந்து நிற்கும் விழாவில், மேடையில் அமைதியாக அமர்ந்திருந்தார் ஒரு மூதாட்டி. 74 வயது மீரா. அந்த விதையை போட்ட ஜெய்வாபாய் தேவ்ஜி ஆஷரின் பேத்தி. பள்ளிக்கு 7.56 ஏக்கர் நிலம் தந்த குடும்பத்தின் வாரிசு. மும்பையில் இருந்து இந்த விழாவுக்காகவே அழைக்கப்பட்டவர். மீரா பேசத் தொடங்கினார்: என் தாத்தா தேவ்ஜி ஆஷர் வெறும் கையுடன் திருப்பூர் வந்தவர். ஜின்னிங் பேக்டரியில் சாதாரண பஞ்சு மில் தொழிலாளி. உழைப்பால் உயர்ந்து பஞ்சு வியாபாரி ஆனார். என் பாட்டி ஜெய்வாபாய், பள்ளி பக்கமே போகாதவர். ஆனால் பெண்கள் படிக்க வேண்டும் என்பதில் அந்தக் காலத்திலேயே உறுதியாக இருந்தார். மரணப் படுக்கையில் இருந்த போது கூட தாத்தாவை அழைத்து, பெண் கல்விக்கு உன்னால் முடிந்ததை செய்துவிடு என்று சொன்னாராம். அந்த வார்த்தையில் இருந்து பிறந்தது தான் இந்தப் பள்ளி. 45 குழந்தைகளுடன் தொடங்கியது, இன்று 5,600 குழந்தைகள் படிக்கிறார்கள். தனியாரிடம் கொடுத்தால் ஒரு நாள் கட்டணம் வசூலிப்பார்கள் என்பதால், நகராட்சியிடமே கொடுக்க வேண்டும் என்பது தாத்தா, பாட்டியின் ஒப்பந்தமாம். இன்று வரை அது ஏழை மாணவியர் படிக்கும் பள்ளியாகவே இருப்பது தான் எங்களுக்கு மகிழ்ச்சி. எங்காவது உயர் பொறுப்பில் இருப்பவர், நானும் ஜெய்வாபாய் மாணவி என்று சொல்லும் போது வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பள்ளி நிர்வாகம் இன்று காட்டிய மரியாதை கண்ணீரை வரவழைத்துவிட்டது. நான் பாட்டியை பார்த்ததில்லை. 1961 முதல் 65 வரை இதே பள்ளியில் தான் படித்தேன். சேர்க்கும் போதே தாத்தா கண்டிப்புடன் சொன்னார், இது நம் பள்ளி என்று யாரிடமும் சொல்லக்கூடாது, போற, படிக்கிற, வர்ற, அவ்வளவு தான் என்று. அந்த கண்டிப்புடன் படித்து பி.ஏ. சைக்காலஜி முடித்து, பணியாற்றி ஓய்வில் இருக்கிறேன். எங்கள் தாத்தா, பாட்டி போட்ட விதை இன்று பல கிளைகளாக நிற்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. இப்படிச் சொல்லி முடிக்கும்போது, மீராவின் கண்களில் ஆனந்தப்பெருக்கு! ஜெய்வாபாய் பள்ளி துவங்க நிலம் வழங்கிய ஜெய்வாபாய் தேவ்ஜி ஆஷர். ஜெய்வாபாயின் பேத்தி மீரா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ