உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / 100 மொழிகளில் திருக்குறள்; மதுரை பேராசிரியரின் குறள் காதல்

100 மொழிகளில் திருக்குறள்; மதுரை பேராசிரியரின் குறள் காதல்

மொழி, இனம், மதம் கடந்து அனைத்து மக்களுக்கும் பொதுவான வாழ்வியல் கருத்துக்களை இரண்டே வரிகளில் ஆழமாக, அழுத்தமாக உணர்த்தி நல்வழிகாட்டும் திருக்குறளுக்கு நிகர் திருக்குறளே. வாழ்வியல் தத்துவங்களை உலகிற்கு சொல்லும் 'உலகப் பொதுமறை' என்ற பெருமை தாங்கிய திருக்குறளுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் மதுரை காமராஜ் பல்கலை 'திருக்குறள் இருக்கை' 52 மொழிகளில் வெளியான திருக்குறள் நுால்களை சேகரித்துள்ளது.திருக்குறள் மீதுள்ள காதலால் இந்த இருக்கை இயக்குநரும், தமிழியல் துறை தலைவருமான முனைவர் சத்தியமூர்த்தி பல்வேறு நாடுகளுக்கு சென்றும், தொடர்பில் இருந்தும் இந்நுால்களை சேகரித்து வருகிறார். '100 மொழிகளில் திருக்குறள்' என்ற இலக்குடன் களம் இறங்கியுள்ள இவர், தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக நம்மிடம்...தமிழக அரசால் 1969ல் சென்னை, மதுரை காமராஜ், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகளில் திருக்குறள் இருக்கைகள் தலா ரூ.3 லட்சத்தில் துவங்கப்பட்டன. திருக்குறள் ஆய்வுகளை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டன.சென்னை பல்கலையில் 'சங்க இலக்கியமும் திருக்குறளும்', மதுரை காமராஜ் பல்கலையில் 'இக்கால இலக்கியமும் திருக்குறளும்', அண்ணாமலையில் 'இடைக்கால இயக்கியமும் திருக்குறளும்' என்ற தலைப்புகளில் ஆய்வுகள் செய்யப்பட்டன.மதுரை காமராஜ் பல்கலையில் 2021ல் இருக்கை இயக்குநராக பொறுப்பேற்றேன். என் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அம்மாபட்டியில் 90 ஆண்டு பழமையான திருவள்ளுவர் சிலை உள்ளது. சிறு வயதில் தினமும் தரிசிப்பது வழக்கம். அப்போது இருந்தே திருக்குறள் மீது எனக்கு காதல் இருந்தது.பல்கலை இருக்கை இயக்குநராக பொறுப்பேற்ற பின் திருக்குறளுக்கு பெருமை சேர்க்க நினைக்கும் போது பல்கலையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. இதன் பின் பிற மொழிகளில் வெளியான திருக்குறள் மொழி பெயர்ப்பு நுால்களையும் சேகரிக்கும் எண்ணம் வந்தது. தற்போது வரை 31 இந்திய மொழிகளிலும், 21 வெளிநாட்டு மொழிகளில் வெளியான திருக்குறள் நுால்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் போன்றவை உதவுகின்றன.வெளிநாட்டு கருத்தரங்கு, பயிலரங்குகள் நடத்திய அனுபவத்தால் நண்பர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் மூலம் மலாய் (மலேசியா), பஹாசா (இந்தோனேசியா), சிங்களம் (இலங்கை), தாய் (தாய்லாந்து), டேனிஷ் (டென்மார்க்), தோக் பிசின் (பப்புவா நியூ கினி), மொரிஷியஸ் (கொரியன்), ஐரிஷ் (அயர்லாந்து), ஜப்பானிஷ், உருது, துளு, ரஷியன், ஜெர்மன், அரபி என வெளிநாட்டு மொழிகளில் வெளியான நுால்களையும் பெற்றேன். இந்நுால்களை சிலர் திருக்குறள் மீது காதலால் தன்னிச்சையாகவும், சிலர் அரசு உதவியுடன் வெளியிட்டுள்ளனர்.திருக்குறள் பல மொழிகளில் மொழி பெயர்த்ததை கேள்விப்பட்டுள்ளோம், கண்ணால் பார்த்தது இல்லை. ஆனால் மதுரை காமராஜ் பல்கலைக்கு வந்தால் 52 மொழிகளில் திருக்குறள் நுால்களை பார்க்க முடியும். இந்நுால்களை பெரிய அளவில் காட்சிப்படுத்துதல், நுால் ஆசிரியர், பதிப்பு, நாடு, மொழி விவரங்களுடன் பல்கலை இணையதளத்தில் தமிழ், ஆங்கிலத்தில் பதிவேற்றம் செய்தல் பணிகளும் நடக்கின்றன.திருக்குறள் தொடர்பான மேற்கோள்கள், சிறப்புகளை தொகுத்து தமிழ், ஆங்கிலம் பிற மொழிகளில் மொழி பெயர்ப்பது, திருக்குறள் அகராதி வெளியிடுவது, அதிகாரத்துக்கு ஒன்று வீதம் 133 தெருக்கூத்து நாடகங்கள் தயார் செய்து திருக்குறள் கருத்துக்களை மக்களிடம் சேர்ப்பது போன்றவற்றையும் பல்கலை 'திருக்குறள் இருக்கை' திட்டமிட்டு வருகிறது. பல்கலை, தமிழக அரசும் உதவி வருகிறது என்கிறார் பேராசிரியர் சத்தியமூர்த்தி.இவரை 94886 16100ல் வாழ்த்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ