உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / எங்கே இருக்கு வேட்டைக்காரன் புலிவண்டு

எங்கே இருக்கு வேட்டைக்காரன் புலிவண்டு

புலிவண்டுகள் என்பது சிசிண்டெலிடே குடும்பத்தின் கீழ் உள்ள வண்டுகளின் குழு ஆகும். அவற்றின் துடிப்பான வண்ணங்கள், நம்ப முடியாத வேகம், வேட்டையாடும் திறன் மூலம் இப்பெயர் பெற்றுள்ளன. மணல் நிறைந்த கடற்கரைகள் முதல் அடர்ந்த காடுகள் வரை பல்வேறு வாழ்விடங்களில் காணப்படும் இந்த வண்டுகள் நிபுணத்துவ வேட்டைக்காரர்கள் போல செயல்படும்.பெரும்பாலும் சிறிய பூச்சிகளை சுறுசுறுப்புடன் துரத்தும் இவை சில நேரங்களில் பதுங்கி இருந்து விட்டு இலக்கை கண்காணித்து பின் வேட்டையாட ஓடும். புலிவண்டுகள் அழகானவை மட்டுமல்ல. சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கும் வகிக்கின்றன. அவற்றை ஆராய்ச்சி செய்வது பூச்சிகளின் வாழ்விட மேம்பாட்டுக்கும், பல்லுயிர் பெருக்கத்திற்கும் தேவை.தமிழகத்தில் புலி வண்டு ஆராய்ச்சி செய்யும் வனவியலாளரும், ரோர் அமைப்பை சேர்ந்தவருமான சரண் கூறியதாவது: புலி வண்டு பூச்சி வகை உயிரினம். இது பல்லுயிர் பெருக்கத்திலும், வனச்சூழலியலுக்கும் பயன் தருகிறது. அமெரிக்காவின் ஐ.யு.சி.என்., எனும் இன்டர்நேஷனல் யூனியன் பார் கன்செர்வேஷன் ஆப் நேச்சர் அமைப்பு விலங்கு இனங்களில் அழியும் நிலை, அழிந்தவை, பொதுவானவை என அடையாளப்படுத்துகிறது.இந்த அமைப்பு இந்தியாவில் புலி வண்டுக்கு அடையாளப்படுத்தும் பணியை துவங்காமல் இருந்த நிலையில் 2024 மே முதல் இந்தியாவில் துவங்கியது. புலிவண்டு ஆராய்ச்சியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக டேவிட் பியர்சன் நிறைய நாடுகளில் ஆராய்ச்சி செய்துள்ளார். 2024 மே மாதம் ஐ.யு.சி.என்., சார்பில் கோயம்புத்துார் கார்ல் குபேல் இன்ஸ்டிடியூட்டில் புலிவண்டு குறித்த கருத்தரங்கில் பங்கேற்க கோல்கட்டா ஷூவாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியா, டேராடூன் வைல்ட்லைப் இன்ஸ்டிடியூட்டில் இருந்து வந்திருந்தனர். ரோர் அமைப்பு சார்பாக நான் பங்கேற்றேன். புலிவண்டு ஆராய்ச்சியாளர் டேவிட் பியர்சனும் வந்திருந்தார். இதில் இந்தியாவில் இருக்க கூடிய 120 ஓரிட வாழ்வியல் புலிவண்டுகள் ஆவணப்படுத்தப்பட்டது.நவ. 11ல் அவரது பிறந்த நாளை உலக புலி வண்டு தினமாக கொண்டாடினோம். ரோர் அமைப்பு சார்பில் புலி வண்டு உருவம் பொறித்த இரும்பு ஊக்குமடல்களை (மெட்டல் பின்ஸ்) வெளியிட்டோம்.உயிரினங்களை வகைப்படுத்தி, அடையாளப்படுத்தும் ஆய்வு தளங்கள் உள்ளன. எல்லோராலும் விஞ்ஞானி ஆக முடியாது. ஆனால் ஆர்வலர்கள் போட்டோக்களை பதிவேற்றம் செய்தால், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் அதை ஆய்வு செய்து பெயர், தகவமைப்பு பற்றி கூறுவர். நாம் அளிக்கும் தகவல்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவிகரமாகும். இவ்வாறு தகவல் பதிவேற்றம் செய்வோரை 'சிட்டிசன் சையின்டிஸ்ட்' என்று கூறுவர்.இத்தகைய ஆய்வு தளமான ஐநேச்சுரலிஸ்ட் சிட்டிசன் சயின்ஸ் தளத்தில் நான் கடந்த ௪ ஆண்டுகளாக புலி வண்டுகள் குறித்து தகவல் அளித்து வருகிறேன். எல்லா பூச்சி வகை உயிரினங்களை பதிவேற்றம் செய்கிறேன்.ஐநேச்சுரலிஸ்ட் சிட்டிசன் சையின்டிஸ்ட்டுகள் 119 வகை புலி வண்டுகளை தான் பார்த்துள்ளனர். தமிழகத்தில் நுாறு புலி வண்டு வகைகளில் 34 மட்டுமே ஆவணப்படுத்தி உள்ளனர். 34ல் அதிகபட்ச புலி வண்டுகளை நான் பதிவேற்றி உள்ளேன். 14 வகைகளை பார்த்துள்ளேன். பறவை ஆர்வலர்கள் அதிகம் இருக்குமளவுக்கு புலி வண்டு பூச்சியை கவனிக்கும் ஆர்வலர்கள் அதிகம் இல்லை. குழந்தைகள், மாணவர்களுக்கு இதுபற்றி ஆர்வம் ஏற்படுத்தினால் விழிப்புணர்வு ஏற்படும்.இந்த உயிரினத்தை எங்கு கண்டுபிடிப்பது என நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏப்டேரியோசா க்ரோசா எனும் புலி வண்டை 200 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் பார்த்துள்ளனர். அதற்கு பின் யாருமே பார்க்கவில்லை. இதனால் அதை புதிரான புலிவண்டு என பெயரிட்டுள்ளனர்.இந்தியாவில் 260 வகை புலிவண்டுகள் உள்ளது தெரியும். இன்னும் அதிகம் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது. ராஜபாளையத்தில் மட்டும் இதுவரை 9 புலிவண்டுகளை பார்த்துள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை