நைஜீரியாவில் ஆடி மாத சிறப்பு வழிபாடுகள்
லேகோஸ், நைஜீரியா: ஆடி மாதம் வந்தாலே அனைத்து பண்டிகைகளும் ஆடிவரும் என்று கூறுவார்கள். ஆடி மாதத்தை லேகோஸ் வாழ் தமிழ் மக்கள் குதூகலத்துடன் வரவேற்றனர். முருகனுக்கு உகந்த ஆடி கிருத்திகை, அம்மனுக்கு உகந்த ஆடிப்பூரம், ஆடி மாத விளக்கு பூஜை மற்றும் ஆடி அமாவாசை அனைத்தும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.ஆடி கிருத்திகை அன்று அர்ச்சனை, அபிஷேகம், சிறப்பு அலங்காரம் என்று களை கட்டிய சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், ஆடிப்பூரத்தன்று துர்க்கை அம்மனை வளையல் அலங்காரத்தில் கண்டு தமிழ் மக்கள் மகிழ்ந்தனர். தொடர்ந்து 12வது வருடமாக லேகோஸ் முருகன் திருக்கோவிலில் ஆடி மாத விளக்கு பூஜை விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை மிகவும் சிறப்பாக ஆலய நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான 11.8.2023 அன்று லேகோஸ் வாழ் தமிழ் பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து தங்கள் இல்லமும், தேசமும் இன்புற்று இருக்க பிரார்த்தனை செய்தனர். காலை 10 மணிக்கு துவங்கிய விளக்கு பூஜையில் சுமங்கலி பெண்கள் திருவிளக்கில் அம்பிகையை ஆவாகனம் செய்து குங்குமத்தால் சகஸ்ர நாம வழிபாட்டில் ஈடுபட்டனர். பாடல்களும் பாடி அம்பிகையை துதித்தனர். 12 மணி அளவில் மகா தீபாராதனை செய்து பிரசாதமும் வழங்கப்பட்டது. கோவில் அர்ச்சகர் சிவகுமார் சிவாச்சாரியார் இந்த பூஜையை நேர்த்தியாக நடத்திக் கொடுத்தார். பூஜைக்கு நன்கொடை அளித்த அனைவருக்கும் மற்றும் பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆலய நிர்வாகம் மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்து கொண்டது.- நமது செய்தியாளர் ஸ்ரீவித்யா அனந்தன்