உள்ளூர் செய்திகள்

இலங்கை : அம்பாறை மாவட்ட மீனவர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

அம்பாறை : அம்பாறை மாவட்ட மீனவர்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் (16) நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரமவின் ஏற்பாட்டில், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் ரத்ன கமகேவின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா, பாராளுமன்ற உறுப்பினர்களான கே. கோடீஸ்வரன், எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். அப்துல் வாஸித், மஞ்சுல சுகத் ரத்நாயக, அமைச்சின் மேலதிக செயலாளர், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள், உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.இதன்போது மீனவர்களின் பிரச்சினைகள் விரிவாக ஆராயப்பட்டு, அவற்றுக்கான தீர்வுகளும் எட்டப்பட்டன. அத்துடன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டன. இந்த மீனவர்களின் பிரச்சினைகள் தேசிய ரீதியில் பிரபல்யப்படுத்தப்படுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா பிரதான காரணமாக இருந்து வந்திருக்கிறார். இது விடயத்தில் முதல் கட்டமாக சாய்ந்தமருதில் மீனவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிவதற்கான ஒரு கூட்டம் நடைபெற்றதையும் அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சம்பந்தப்பட்ட பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் மீனவர் சம்பந்தமான கூட்டமொன்று இடம்பெற்றதோடு, அதன் தொடர்ச்சியாகவே இந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம் பெற்றிருக்கின்றது.எனவே, மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து தீர்வினைத் தேடிக் கொடுக்கும் நிமிர்த்தமாக, தொடர்ந்தேர்ச்சியான செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா முக்கிய காரணியாக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.- நமது செய்தியாளர், காஹிலா .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !