உள்ளூர் செய்திகள்

ஆக்லாந்தில் கர்நாடக இசைக்கச்சேரி

நியூஸிலாந்து கர்னாடிக் சொசைட்டி சென்ற சனியன்று அதாவது 16/11/25 அன்று மதியம் 3.30 மணியளவில் ஆக்லாந்தில் உள்ள ப்க்ளிங் மையத்தில் இசை கச்சேரிக்கு கர்நாடக சங்கீத இளம் இசை கலைஞரான அபிலாஷ் கிரிபிரசாத்தின் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இவர் பிரபல இசைக்கலைஞர் ஏ.எஸ்.முரளியிடம் முறைப்படி சங்கீதம் பயின்றவர். மேலும் செம்மங்குடி பாணியை பின்பற்றுபவர். அபிலாஷுடன் இணைந்து ஆருஷி ரமேஷ் அவர்கள் வயலின், மற்றும் கருண் ஸல்வாடி மிருதங்கம் வாசித்து கச்சேரியை சிறப்புறசெய்தனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மாலா நட்ராஜ் இசை கலைஞர்களை வரவேற்று அறிமுக உரையாற்றினார். அபிலாஷ் முதலில் நாட்டக்குறிஞ்சி ராகத்தில் அமைந்தவர்ணத்துடன் ஆரம்பித்து கச்சேரியை தொடங்கினார். பின் மாயாமாளவ கௌளை ராகத்தில் சிவநாதனை கண்டு என்ற கோபாலகிருஷ்ண பாரதியின் கிருதியை விஸ்தாரமாக ஸ்வரப்ரஸ்தாரங்களுடன் பாடினார். தொடர்ந்து 'ராமா நாம பாயசகே கிருஷ்ணா நாம சக்கரே ' என்ற புரந்தர தாஸரின் க்ருதியை பாடி அமீர்கல்யாணி ராகத்தில் மற்றொரு கிருதியை பாடி பின் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் கர்நாடக தேவ காந்தாரி ராகத்தில் அமைந்த பஞ்சாஷட் பீட ரூபிணி என்ற கீர்த்தனையை வெகு சிறப்பாக பாடினார். பின்னர் கச்சேரியில் முக்கிய ராகமாக தோடி ராகத்தை விஸ்தாரமாக ஆலாபனை செய்து பாபநாசம் சிவனின் கார்த்திகேய காங்கேய என்ற கீர்த்தனையை மிகச்சிறப்பாக கல்பனா ஸ்வரங்கள் அமைத்து பாடி ரசிகர்களின் கைதட்டலை பெற்றார். பிறகு பல துக்கடா பாடல்களை பாடி ரசிகர்களின் மனதை கவர்ந்தார். குறிப்பாக மாண்ட் ராகத்தில் 'பேக பாரோ', ஆஹிர் பைரவியில் சாய் பஜன் , ஜோன்புரி ராகத்தில் 'பாருக்குள்ளே நல்ல 'நாடு' என்ற பாரதியாரின் பாடலை பாடி மற்றும் கதனகுதுகூலம் ராகத்தில் ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணாவின் தில்லானாவோடு மங்களம் பாடி முடித்தார். அபிலாஷ் சபையோர்களின் ஏகோபித்த கரவொலிகளை பெற்றார். பக்கபலமாக அவருடன் இசைந்து ஆருஷியின் வயலினும், கருண் ஸல்வாடியின் தனி ஆவர்த்தனமும் மிகச்சிறப்பாக இருந்தது. இறுதியாக மாலா நட்ராஜ் இசை நிகழ்ச்சியையும் கலைஞர்களையும் வெகுவாக பாராட்டி பேசினார். - ஆக்லாந்திருந்து நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !