இங்கிலாந்தில் வட தமிழ்ச் சங்கம் சார்பில் தீபாவளிக் கொண்டாட்டம்!
மான்செஸ்டர் : இங்கிலாந்தில் 39 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து தமிழ் மொழி, பண்பாடு, பாரம்பரியத்தைப் பேணிக்காக்கும் வட தமிழ்ச் சங்கம் (Northern Tamil Association, UK) சார்பில், “தீபாவளிக் கொண்டாட்டம் 2025 ' எனும் கலைத் திருவிழா மான்செஸ்டர் நகரில் மிகு சிறப்பாக நடைபெற்றது. இந்திய தூதரக அலுவலகத்தின் அதிகாரி விஷாகா யதுவன்சி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், க்ரோடா நிறுவனத்தின் வழங்கல் தொடர் மேலாண்மைத் தலைவர் திருச்செல்வம், Royal College of Anaesthesia, UK கல்லூரியின் டீன் மருத்துவர் கணேசன் பரணிதரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.பிரமாண்ட மேடை அலங்காரங்களுடனும், வண்ணமயமான விளக்குகளுடனும், பண்டிகை பெரும் உற்சாகத்துடன் நடைபெற்றது. பல்துறை கலை நிகழ்ச்சிகள்இங்கிலாந்து நாட்டின் வடபகுதியின் பத்து மண்டலங்களிலிருந்து நூற்றுக்கணக்கான கலைஞர்கள் கலந்து கொண்டனர். நடனம், நாடகம், பாடல், இசைக்கருவி வாசிப்பு, பாரம்பரிய கலைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. சிறுவர், இளைஞர், பெரியவர் என வயது வித்தியாசமின்றி அனைவரும் உற்சாகமாக பங்கேற்றனர். பறையாட்டம், சிலம்பம், களரி, பரதநாட்டியம், கரகாட்டம் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின. மேடையே சிறந்த கலைவிழா மேடையாக மாறி, தமிழர்களின் திறமைகளின் திருவிழாவாக மிளிர்ந்தது.பரிசுகள் மற்றும் சமூக சேவை அயர்லாந்து நாட்டிலிருந்து தமிழ்மைந்தன் ஜான் ரிச்சர்டு, இங்கிலாந்திலிருந்து ஜனனி, முனைவர் ஸ்ருஜானா ஆகியோர் நடுவராகப் பணியாற்றினர். பல மணி நேரங்கள் நீண்ட கலைப் போட்டிகளுக்குப் பிறகு, மான்செஸ்டர் நகர அணி மொத்தச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.மேலும், விழாவின் போது திரட்டப்பட்ட நிதியில் ஒரு பகுதி — கோயமுத்தூரைச் சார்ந்த “இதயங்கள்” என்ற தொண்டு நிறுவனம் மூலம் குழந்தைகள் நீரிழிவு நோய் நிவாரணத்திற்காக ரூ.1 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. இது விழாவை ஒரு கலை நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், சமூகப் பொறுப்புடன் இணைந்த நற்செயலாக மாற்றியது.தமிழ் மரபின் ஒளி இங்கிலாந்தின் பல நகரங்களில் வசிக்கும் தமிழர்கள், தங்கள் குடும்பத்தினருடன் பெருமளவில் பங்கேற்று, சுமார் ஏழு மணி நேரம் நீண்ட இந்த வண்ணமயமான நிகழ்ச்சிகளை ரசித்தனர். தமிழின் செழுமையான பண்பாட்டையும், கலை மரபையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் முக்கியமான முயற்சியாக இந்த விழா அமைந்தது. வட தமிழ்ச் சங்கம் கடந்த பல ஆண்டுகளாக, கல்வி, கலாச்சாரம், சமூக ஒருமைப்பாடு போன்ற துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.அந்த பணியை இன்னும் உயர்த்தும் வகையில், இந்த தீபாவளி கலைவிழா ஒரு புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது. வடதமிழ்ச் சங்கத்தின் தலைவர் ஜோசப் கருணா மற்றும் பொறுப்பாளர்கள், தன்னார்வலர்கள் பலரும் நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினர். - அயர்லாந்திலிருந்து நமது செய்தியாளர் ரமேஷ் நாதன்