உள்ளூர் செய்திகள்

மான்செஸ்டர் ஆல்ட்ரிங்காம் விழாவில் சிகரம் தமிழ் பள்ளி மாணவர்கள் அசத்தல்

பிரிட்டனின் தொழில் தலைநகரமான மான்செஸ்டெரில் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும், 'ஆல்ட்ரிங்காம்' விழா சமீபத்தில் நடந்தது. இதில், சிகரம் தமிழ் பள்ளியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகம், களரி, சிலம்பம், காவடி உள்ளிட்ட கலைகளை பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக்கியபடி அணிவகுத்துச் சென்றனர். அந்த அணிவகுப்பில் பங்கேற்ற பல குழுக்களில் சிறந்த பள்ளிக் குழுவிற்கான கோப்பையை சிகரம் பள்ளி மாணவர்கள் வென்றனர். அவர்கள் நிகழ்த்திக்காட்டிய சிலம்பம், மயிலாட்டம், கரகம், பறை போன்ற கலை நிகழ்ச்சிகள் தமிழர்களின் தொன்மை மற்றும் பண்பாட்டை உலகிற்கு பறைசாற்றுவதாக அமைந்தது. தொண்டு நிறுவனங்களுக்கான பிரிட்டன் அரசின் அங்கீகாரத்தை சமீபத்தில் பெற்ற சிகரம் தமிழ் பள்ளி, முதல்முறையாக தங்களுக்கும் தங்களை போன்ற மற்ற தொண்டு நிறுவனங்களுக்கும் நிதி திரட்டும் வகையில் ஒரு தற்காலிக தென்னிந்திய உணவு விடுதியை விழாவில் அமைத்திருந்தது. இங்கு அமைக்கப்பட்டிருந்த தோசை விற்பனையகத்தில் தயாரித்து வழங்கப்பட்ட தோசைகள் விற்பனையில் முத்திரை பதித்தன. மான்செஸ்டர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வசிக்கும் நம் தமிழ்ச் சமூகம் இந்த நிகழ்ச்சிக்கும் எங்களுக்கும் தங்களின் பேராதரவை வழங்கியது. அவர்களில் பெரும்பாலானோர் நம்முடைய பாரம்பரிய உடைகளை அணிந்து வந்து ஆர்வமுடன் இந்த ஊர்வலத்தில் பங்கேற்று எங்களை உற்சாகப்படுத்தினர். அவர்கள் அளித்த உற்சாகத்தினால், இந்த விழா நம் மண்ணில் நடப்பது போன்ற உணர்வை தந்தது. இந்தத் திருவிழாவில் சிகரம் தமிழ் பள்ளியின் பங்கேற்பு நம் அடுத்த தலைமுறையினருக்கு நம் சமூகத்தின் மீதான ஈடுபாட்டையும், பல்வேறு கலாசாரங்களையும் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்தது. சிகரம் தமிழ்ப் பள்ளி ஆல்ட்ரிங்காமில் உள்ள பிராட்ஹீத் தொடக்கப்பள்ளியில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 4:00 மணியில் இருந்து 6:00 மணி வரை நடக்கிறது. இங்கு தமிழ் மொழி, பறை இசை மற்றும் களரி, சிலம்பம் போன்ற தமிழர்களின் தற்காப்புக் கலைகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. எங்கள் பள்ளியின் நோக்கங்கள், திட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் மேலதிக விபரங்களை https://www.sigaram.co.uk/. என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். - தினமலர் வாசகர் சுவாமிநாதன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்