கலகலத்த எங்கள் வீட்டு நவராத்திரி கொலு
வடஇந்தியர்கள், தென்இந்தியர்கள், அமெரிக்கர்கள், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என எவ்வித பாகுபாடும் இல்லாத ஒரு கொலு எங்கள் வீட்டு கொலு! பாரம்பரியத்தையும் பக்தியையும் இணைக்கும் அழகிய விழா! இந்த ஆண்டும் எங்கள் வீடு நவராத்திரி ஆனந்தத்தில் முழங்கியது. ஒன்பது இரவுகளும் தெய்வ பக்தியாலும், கலாச்சாரச் சிறப்பாலும், நட்பின் நெகிழ்ச்சியாலும் நிறைந்திருந்தன. எங்கள் கொலுவின் மையப்பகுதியில், என் கணவர் பக்தியுடன் வடிவமைத்த சிவலிங்கம் கம்பீரமாக அமர்ந்திருந்தார். பார்க்க வந்த அனைவருக்கும் ஒருவித பக்தி பரவசத்தை உண்டாக்கியது. சிவபிரானைச் சுற்றி திருவண்ணாமலை கிரிவலம், திருக்கல்யாணம், விருந்து காட்சி, கோவர்த்தன மலையைத் தூக்கிய கிருஷ்ணர், அனைவரையும் கவர்ந்த கும்பகர்ணன், மேலும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் கொலுவின் “நாயகி”யாக திகழும் குட்டி தேவதை (பொம்மை பாப்பா) எனப் பல்வேறு சிறப்பு அம்சங்கள் சேர்ந்து இருந்தன. ஒவ்வொரு பொம்மையும் ஒரு நினைவையும் ஒரு உணர்வையும் தாங்கியிருந்தது. பழையவற்றை சுத்தம் செய்து புதிய அமைப்பில் வைக்கும் போது குழந்தைத்தனமான உற்சாகம் தோன்றியது. ஒன்பது நாட்களும் நண்பர்கள், உறவினர்கள் வந்து பாடல் பாடி, சுண்டல் சுவைத்து, கதை பகிர்ந்து வீட்டை மகிழ்ச்சியால் நிரப்பினர். சிறார்களுக்கு இது ஒரு கலாச்சாரப் பாடமாகவும், எங்களுக்கு இது தாய்நாட்டின் வாசம் நினைவூட்டும் ஆனந்த நேரமாகவும் அமைந்தது. அமெரிக்க மண்ணிலிருந்தும் இந்திய பாரம்பரியத்தின் ஒளி பரவச் செய்கிறது எங்கள் வீட்டு கொலு — பக்தி, அழகு, பாசம் அனைத்தையும் ஒரே மேடையில் இணைக்கும் இனிய விழா! - - சான் ஆன்டோனியோவிலிருந்து நமது செய்தியாளர் ஷீலா ரமணன்