உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நீதிபதி சந்த்ரு வாழ்க்கையை சினிமாவாக்க ஆசைப்பட்டேன்: பார்த்திபன்

நீதிபதி சந்த்ரு வாழ்க்கையை சினிமாவாக்க ஆசைப்பட்டேன்: பார்த்திபன்

சூர்யா, ஜோதிகா தயாரிப்பில், சூர்யா நடிப்பில், த.செ.ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தை பல தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். இந்த படத்தில் இருளர்களின் வாழ்க்கையும், முன்னாள் நீதிபதி சந்த்ருவின் வாழ்க்கையும் கதை களமாக இருந்தது. படத்தை பார்த்த நடிகர் பார்த்திபன், நீதிபதி சந்த்ருவின் வாழ்க்கையை தான் படமாக்க ஆசைப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: சட்டத்தை நீதி, நிதி எதற்கும் பயன்படுத்தலாம். அப்படியே சினிமாவையும், நிறைய காசுக்கும் நல்ல காரணத்திற்கும் பயன்படுத்தலாம். ஒரு சினிமா மூலமாக ஏற்கனவே (இருளர்கள்) இருண்டிருக்கும் வாழ்வில் சிறு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி அதையும் ஒரு கமர்ஷியல் என்று வண்ணம் பூசிக் கொள்ளாமல் உலக அளவில் கமர்ஷியலாகவும் வென்றிருக்கும் திரைப்படத்தை, பார்க்கத் துவங்கி கரைந்தே போனேன்.

சந்துரு சார்! இது பெயரல்ல. நீதி என்ற பதத்தின் மொழிபெயர்ப்பு! அவரை நான் நல்லது செய்யும் மேடைகளில் நடுநாயகராக அமர்த்தி கௌரவம் தேடிக் கொண்டுள்ளேன். அவரின் வாழ்க்கையை படமாக்கவும் ஆசைப்பட்டுள்ளேன். அது இன்று த.செ.ஞானவேல் மூலம் நிறைவேறி இருக்கிறது. இன்று பிரபஞ்சம் சந்துருவை பாராட்ட, மெய் சிலிர்க்கிறேன். சினிமா மூலம் சமூகத்திற்கு கோடானு கோடி நன்மை செய்திருக்கும் சூர்யா மற்றும் ஜோதிகாவை மானசீகமாக வணங்குகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !