'புஷ்பா' - ஹிந்தி வெளியீட்டுச் சிக்கலுக்குத் தீர்வு
ADDED : 1411 days ago
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் படம் 'புஷ்பா'.
இரண்டு பாகங்களாகத் தயாராகியுள்ள இப்படத்தின் முதல் பாகம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர் 17ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் ஹிந்திப் பதிப்பை வெளியிடுவதில் ஒரு சிக்கல் இருந்தது. தென்னிந்திய மொழிப் படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடும் பிரபல நிறுவனத்திற்கு இப்படத்தின் ஹிந்தி உரிமையைக் கொடுத்திருந்தார்கள். அவர்கள் படத்தை யூடியூபில் வெளியிட திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது.
ஹிந்தியிலும் தியேட்டர்களில் வெளியிட்டால்தான் படத்திற்குப் பெருமை. எனவே, அது சம்பந்தமாக ஹிந்தி உரிமையை வாங்கியவர்களிடம் பேச்சு வார்த்தை நடந்தது. ஆரம்பத்தில் அவர்கள் உரிமையை விட்டுக் கொடுக்க மறுத்தார்கள். அல்லு அர்ஜுனே நேரடியாகப் பேச்சு வார்த்தையில் இறங்கியதாகத் தெரிகிறது.
தற்போது ஏஏ பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளதாம். ஹிந்தியில் 'பாகுபலி, கேஜிஎப்' ஆகிய படங்களை இந்நிறுவனம்தான் வெளியிட்டது. ஹிந்தி, தெலுங்கு, தமிழ்ப் படங்களில் நடித்துள்ள நடிகை ரவீனா டாண்டன் கணவருக்குச் சொந்தமான வினியோக நிறுவனம் இது. பாலிவுட்டில் முக்கிய வினியோக நிறுவனங்களில் இதுவும் ஒன்று.
பிரச்னை முடிவுக்கு வந்ததை அடுத்து டிசம்பர் 17ம் தேதி திட்டமிட்டபடி 'புஷ்பா' படம் பான்-இந்தியா படமாக வெளியாக உள்ளது. இதற்கடுத்தே 'ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.