உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கேபிஏசி லலிதாவுக்கு கல்லீரல் தானம் செய்ய முன் வந்த ரசிகர்

கேபிஏசி லலிதாவுக்கு கல்லீரல் தானம் செய்ய முன் வந்த ரசிகர்

பழம்பெரும் மலையாள நடிகை கேபிஏசி லலிதா. தமிழ்நாட்டில் மனோரமா போன்று மலையாளத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். தமிழில் காதலுக்கு மரியாதை, காற்று வெளியிடை, உள்ளம் கேட்குமே, கிரீடம் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தில் நடித்தார். கேரள சங்கீத நாடக அகாடமி தலைவராகவும் உள்ளார்.

73 வயதான லலிதா, கல்லீரல் பிரச்சினை காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மருத்துவ செலவை ஏற்பதாக அரசும் அறிவித்திருக்கிறது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

இதை தொடர்ந்து லலிதாவின் மகள் ஸ்ரீகுட்டி, கல்லீரல் தானம் செய்யக் கோரி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அவரது ரசிகர் கலாபவன் சோபி என்பவர் கல்லீரல் தானம் செய்ய முன்வந்துள்ளார்.

இதுகுறித்து கலாபவன் சோபி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: லலிதா சேச்சியின் தீவிர ரசிகன் நான். அவர் அங்கம் வகிக்கும் நாடக அகாடமியிலும் இருக்கிறேன். அவருக்கும் எனக்கும் ஒரே ரத்த வகை. எனக்கு 54 வயதாகிறது. நான் கல்லீரல் தானம் செய்யலாம் என்று டாக்டர்களும் கூறியிருக்கிறார்கள். எனக்கு மது பழக்கமோ, புகை பழக்கமோ இல்லை. அதனால் நான் லலிதா சேச்சிக்கு கல்லீரல் தானம் செய்கிறேன். இதுகுறித்து டாக்டர்களுக்கு தெரிவித்து விட்டேன். அவர்கள் எப்போது அழைத்தாலும் செல்ல தயாராக இருக்கிறேன். என்று கூறியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !