பாலகிருஷ்ணாவுக்கு பயமில்லை : ஸ்டன்ட் சிவா
பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட பல படங்களுக்கு சண்டைப்பயிற்சி இயக்குனராக இருந்த ஸ்டன்ட் சிவா, தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து சமீபத்தில் வெளியான அகண்டா படத்திற்கும் சண்டைக்காட்சி அமைத்திருந்தார். இப்படம் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி, உலகளவில் பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.
ஸ்டன்ட் சிவா அளித்த பேட்டி: ‛லட்சுமி நரசிம்மன், சிம்ஹா' படங்களை அடுத்து, 3வது முறையாக ‛அகண்டா' படத்தில் பாலகிருஷ்ணாவுடன் பணியாற்றியுள்ளேன். ஆக்சன் காட்சிகள் மட்டும் 85 நாள் படமாக்கப்பட்டது. என் இருமகன்கள், கெவின் மற்றும் ஸ்டீவன் இப்படத்தில் எனக்கு உதவியாக இருந்தனர். அவர்களாலும், இயக்குனர் போயபதி ஸ்ரீனு மற்றும் பாலகிருஷ்ணாவாலுமே எனக்கு இந்த வெற்றி சாத்தியமானது. நாம் சொல்லிக்கொடுத்ததை பாலகிருஷ்ணா செய்யும் போது அது பன்மடங்கு மாஸ் ஆகிவிடுகிறது. அவருக்கு பயமே இல்லை. சண்டைக்காட்சியில் காலில் அடிபட்டு ரத்தம் கொட்டிய போதும் படப்பிடிப்பை நிறுத்தாமல் நடித்துக் கொடுத்தார். விரைவில் தமிழ் படம் ஒன்றில் வில்லனாக நடிக்கிறேன். சண்டைக்காட்சியில் நிறைய புதுமைகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.