24 ஜேம்ஸ்பாண்ட் படங்கள் ஓடிடியில்…
ஹாலிவுட் படங்களின் ஹீரோக்களில் 'ஜேம்ஸ்பாண்ட் 007' சினிமா ரசிகர்களை 60 வருடங்களுக்கும் மேலாக ரசிக்க வைத்து வருகிறார்.
1962ல் வெளிவந்த 'டாக்டர் நோ' படம்தான் முதல் ஜேம்ஸ்பாண்ட் படம். கடைசியாக 2021ல் 'நோ டைம் டூ டை' என்ற படம் வெளிவந்தது. இந்த 25 படங்களில் 'நோ டைம் டூ டை' படம் தவிர மற்ற 24 படங்களும் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இடம் பெற்றுள்ளன.
கடந்த வருடம் மெட்ரோ கோல்ட்வின் மேயர் (எம்ஜிஎம்) நிறுவனத்தை 8.45 பில்லியன் யுஎஸ் டாலர் கொடுத்து அமேசான் நிறுவனம் வாங்கியது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 62,000 கோடி. இதன் மூலம் எம்ஜிஎம் நிறுவனத்தின் 4000ம் படங்கள், 17000 மணி நேரம் பார்க்கக் கூடிய டிவி நிகழ்ச்சிகளும் அமேசானுக்கு சொந்தமாகும்.
இந்தியாவிலும் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றுள்ளன. அந்தப் படங்களுக்குக் கிடைத்த வரவேற்புதான் பிற்காலத்தில் பல ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் வெளிவரக் காரணமாக அமைந்தது. உலக அளவில் ஹாலிவுட் படங்களுக்கான மார்க்கெட்டில் இந்தியாவிற்கும் ஒரு முக்கிய இடமுண்டு.
60 வருடங்களாக வெவ்வேறு கால கட்டங்களில் ஜேம்ஸ்பாண்ட் ரசிகர்களாக இருந்தவர்கள், இருப்பவர்கள் இப்போது அவர்கள் விருப்பமான படங்களை அமேசான் ஓடிடி தளத்தில் பார்த்து ரசிக்கலாம்.