அண்ணாமலையாரை தரிசனம் செய்த அருண் விஜய்
ADDED : 1335 days ago
அருண் விஜய்க்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டு. அவர் நடித்து முடித்துள்ள 5 படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளன. அக்னிச்சிறகுகள், சினம், யானை, பார்டர், ஓ மை டாக் படங்கள் வெளிவருகின்றன. மேலும் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இதனால் அருண் விஜய் அண்ணாமலையார் தரிசனத்துக்காக திருவண்ணாமலை சென்றார். முதல்நாள் இரவு கிரிவலம் சென்ற அவர் மறுநாள் காலை கோயிலுக்கு சென்று வழிபட்டார். அப்போது கோயில் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் அவருடன் படம் எடுத்துக் கொண்டனர்.
இதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது: இந்த ஆண்டு எனக்கு நிறைவான ஒரு ஆண்டாக இருக்கும். நான் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. எல்லா படங்களுமே தனித்தனியான தன்மைகளை கொண்டது. எனது படங்கள் மட்டுமின்றி அனைத்து படங்களும் வெற்றி பெற வேண்டிக் கொண்டேன்.
கொரோனா தொற்றால் தமிழ் சினிமா பெரும் வேதனைகளை சந்தித்து விட்டது. தமிழ் திரையுலகம் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்ப வேண்டும் என வேண்டிக்கொண்டேன். என்றார். அருண் விஜய்யின் கிரிவலம் மற்றும் வழிபாட்டில் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.