பிப்.,25ல் பீம்லா நாயக் ரிலீஸ் உறுதி
மலையாளத்தில் பிரித்விராஜ் - பிஜுமேனன் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற 'அய்யப்பனும் கோஷியும்' படம் தெலுங்கில் பவன் கல்யாண் மற்றும் ராணா நடிப்பில் பீம்லா நாயக் என்கிற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. இரண்டு ஹீரோக்களுக்கு சம முக்கியத்துவம் உள்ள கதை என்றாலும் தெலுங்கில் பவன் கல்யாணுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக பீம்லா நாயக் என அவரது கதாபாத்திர பெயரையே டைட்டிலாக வைத்துள்ளார்கள்.
இந்தப்படத்தை சாகர் சந்திரா இயக்கியுள்ளார். த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார். இதில் பவன் கல்யாண் ஜோடியாக நித்யா மேனனும் ராணா ஜோடியாக சம்யுக்தா மேனனும் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே ஓரிருமுறை அறிவிக்கப்பட்டு பின்னர் கொரோனா தாக்கம் காரணமாக தள்ளிப்போனது. இந்தநிலையில் வரும் பிப்-25ஆம் தேதி இந்தப்படம் உறுதியாக வெளியாகிறது என ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.