சூர்யா - பாலா படம் ஆரம்பம் : நாயகியாக இணைந்தார் கிர்த்தி ஷெட்டி
ADDED : 1432 days ago
சூர்யாவுக்குள் இருந்த நடிகரை வெளி கொண்டு வந்தவர் இயக்குனர் பாலா. இருவரும் இணைந்து நந்தா, பிதாமகன் படங்களில் பணியாற்றினர். அதன்பின் பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் சிறப்பு வேடத்தில் தோன்றினார். இந்நிலையில் 18 ஆண்டுகளுக்கு பின் இவர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். சூர்யாவின் 41வது படமாக உருவாகும் இப்படத்தை சூர்யாவே தயாரிக்கிறார்.
இப்படத்திற்காக கன்னியாகுமரியில் செட் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு இன்று துவங்கி உள்ளது. இதுப்பற்றிய அறிவிப்பை சூர்யா வெளியிட்டுள்ளார். பாலா உடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, ‛‛எனது வழிகாட்டியான அண்ணன் பாலா ஆக் ஷன் சொல்ல காத்திருந்தேன். 18 ஆண்டுகளுக்கு பின் அது நிகழ்ந்துள்ளது. உங்கள் அனைவரின் வாழ்த்து தேவை'' என பதிவிட்டுள்ளார்.
இதன் உடன் இப்படத்தில் நாயகியாக கிர்த்தி ஷெட்டி இணைந்துள்ளார். இதற்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது. மேலும் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷூம், ஒளிப்பதிவாளராக பாலசுப்ரமணியமும் பணியாற்றுவதாக அறிவித்துள்ளனர். மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது.