உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தரமணி திரைப்பட நகரம் உலக தரத்துக்கு மேம்படுத்தப்படும் - அமைச்சர்

தரமணி திரைப்பட நகரம் உலக தரத்துக்கு மேம்படுத்தப்படும் - அமைச்சர்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 44வது ஆண்டு தொடக்க விழா மற்றும் முன்னாள் தலைவர்களின் படத்திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி தலைமை தாங்கினார். துணை தலைவர் கதிரேசன், பொருளாளார் சந்திரபிரகாஷ் ஜெயின் முன்னிலை வகித்தனர். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் எம்.பி.சாமிநாதன் படங்களை திறந்து வைத்து, முன்னாள் தலைவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: கொரோனா தொற்றால் நசிந்து போன தொழில்களில் திரைப்பட தொழிலும் ஒன்று. இங்கு என்னிடம் கோரிக்கை மனு கொடுத்தார்கள். இதுகுறித்து நானும், தம்பி உதயநிதி ஸ்டாலினும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம், சினிமாத் துறை போன்றே அரசின் நிதி நிலமையும் இப்போது மோசமாக இருக்கிறது. நிதி தேவைப்படாத படப்பிடிப்பு அனுமதிகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து விரைந்து முடிவெடுக்கப்படும். குறிப்பாக எழும்பூர் அருங்காட்சியகம், வள்ளுவர் கோட்டம், ராஜாஜி ஹால் உள்ளிட்ட இடங்களில் மீண்டும் படப்பிடிப்பு நடத்த ஏற்பாடு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தரமணி திரைப்பட நகரம் நகரின் மைய பகுதியில் 24 ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கிறது. அது உலக தரத்துக்கு மேம்படுத்தப்பட இருக்கிறது. அதற்கான திட்டம் தயாரிக்க முதற்கட்டமாக 10 லட்ச ரூபாயை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார். தமிழ் சினிமா இந்திக்கு அடுத்த இடத்தில் இருப்பதாக சொல்வார்கள். அதனை முதலிடத்துக்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முன்னாள் தலைவர்கள் பாரதிராஜா, கே.முரளிதரன், கேயார், கலைப்புலி எஸ்.தாணு, பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !