மம்முட்டி 71... இன்னோசென்ட் 50... ஜெயராம் 30...
மலையாள திரையுலகை சேர்ந்த மூன்று பிரபலங்கள் தங்களது திரையுலக பயணத்திலும் வாழ்க்கையிலும் மிக முக்கியமான இலக்குகளை நேற்று எட்டியுள்ளனர். இதற்காக அவர்கள் தங்களது ரசிகர்களிடமிருந்து வாழ்த்துக்களை பெற்றனர்.
நடிகர் மம்முட்டி நேற்று தனது 71வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் சிவகுமாரை மார்க்கண்டேயன் என்று சொல்வதுபோல மலையாள சினிமாவின் மார்க்கண்டேயன் என்று மம்முட்டியை தாராளமாக சொல்லலாம் என்கிற அளவிற்கு தற்போதும் இளமைத் துடிப்புடன் வலம் வருகிறார் மம்முட்டி.
அதேபோல பிரபல மலையாள காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான இன்னோசென்ட், மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைத்து நேற்று ஐம்பது வருடங்களை தொட்டுள்ளார். இத்தனை வருடங்களில் அவர் கிட்டத்தட்ட 750 படங்களில் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து உள்ளார். இடையில் அரசியலிலும் நுழைந்து கவுன்சிலராக பதவி வகித்து பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் வரை பொறுப்பு வகிக்கும் அளவுக்கு உயர்ந்தார். தற்போது சினிமாவில் மீண்டும் பிஸியாக நடித்து வருகிறார்.
அதேபோல நடிகர் ஜெயராம் தன்னுடன் கதாநாயகியாக படத்தில் இணைந்து நடித்த நடிகை பார்வதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நேற்று இவர்களது 3௦வது திருமண நாள்.. திரையுலகை சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டால் எந்த அளவிற்கு அந்நியோன்யமாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக ஜெயராம் - பார்வதி தம்பதியினர் இருப்பதாக ரசிகர்கள் பலரும் குறிப்பிட்டு அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.