யு-டியூப் சேனல் துவங்கிய மேக்னா ராஜ்
தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மேக்னா ராஜ். அதன்பின் மலையாளம் கன்னடம் என நிறைய படங்களில் நடித்தவர், கன்னட நடிகரும் நடிகர் அர்ஜூனின் நெருங்கிய உறவினருமான சிரஞ்சீவி சார்ஜா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த 2020ல் சிரஞ்சீவி சார்ஜா எதிர்பாராதவிதமாக மாரடைப்பால் காலமானார். அந்த சமயத்தில் கர்ப்பமாக இருந்த மேக்னா ராஜூக்கு கடந்த 2020 இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது.
அதன்பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ள மேக்னாராஜ் தற்போது ஓரிரு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தனது பெயரிலேயே புதிய யுடியூப் சேனல் ஒன்றை துவங்கியுள்ளார் மேக்னாராஜ். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று இந்த சேனலை துவக்கியுள்ள மேக்னா, ரசிகர்களுடன் நேரடியாக பழகுவதற்கும் தன்னைப் பற்றிய புதிய விஷயங்களை அவர்களுக்கு தெரிவிப்பதற்கும் இந்த யுடியூப் சேனலை துவங்கியுள்ளதாக கூறியுள்ளார்.