விஜய்சேதுபதி நடிக்க தயங்கிய படம் : முத்தையா முரளிதரன் வாழ்க்கை சினிமா ஆனது
இலங்கையை சேர்ந்த பூர்வீக தமிழரான முத்தையா முரளிதரன், இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருந்தார். அவரது வாழ்க்கை '800' என்ற தலைப்பில் படமாக தயாராக இருந்தது. இதில் முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு அதற்கான கிரிக்கெட் பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் முத்தையா முரளிதரன் தமிழர்களின் நலனுக்கு எதிரானவர் என்று கூறி சில அமைப்புகள் விஜய்சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அவர் படத்தில் நடிக்கத் தங்கி அதிலிருந்து வெளியேறினார்.
தற்போது அந்த படம் மீண்டும் உருவாகி வருகிறது. இதில் முத்தையா முரளிதரன் கேரக்டரில் 'ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் நடித்த மதுர் மிட்டல் நடிக்கிறார். அவரது மனைவி மதிமலர் கேரக்டரில் மஹிமா நம்பியார் நடிக்கிறார். இவர்கள் தவிர நரேன், நாசர், வேல ராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள் தாஸ், ஹரி கிருஷ்ணன், யோக் ஜேபி, சரத் லோஹிதாஷ்வா உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசை அமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தை மூவி டிரியன் மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. கனிமொழி படத்தை இயக்கிய எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்குகிறார். இலங்கை, சென்னை, கொச்சி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டு இதன் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.