நான் சிகரெட் பிடித்ததை கண்டித்தவர் சரத்பாபு : ரஜினி உருக்கம்
சென்னை : ‛‛நான் சிகரெட் பிடித்ததை கண்டித்தவர் சரத்பாபு...'' என அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‛‛என் மேல் அளவு கடந்த அன்பு கொண்டவர். சிகரெட் பிடிப்பதை பார்த்து வருத்தப்படுவார். சிகரெட்டை நிறுத்து, உடம்பை தேத்து நீ ரொம்ப நாள் வாழணும் என்பார். நான் சிகரெட் பிடித்தால் கூட அதை பிடுங்கி அணைத்து தூக்கி போட்டு விடுவார். அவர் முன்னால் நான் சிகரெட் பிடிக்க மாட்டேன். அண்ணாமலை படத்தில் வரும் சவால் டயலாக் சரியாக வரவில்லை. 10-15 டேக் போனது. அப்போது படப்பிடிப்பில் ஒரு சிகரெட் கொண்டு வர சொல்லி எனக்கு கொடுத்தார். அதன்பின் தான் அந்த டேக் ஓகே ஆனது. அவரின் அன்புக்காக இதை இங்கு சொல்கிறேன். என்னை உடம்பு பார்த்துக்கோ என சொல்லியவர் இப்போது அவர் இல்லாமல் போனது வருத்தமாக உள்ளது. ரொம்ப நல்ல மனிதர். அவரின் ஆத்மா சாந்தி அடையணும்'' என்றார்.
முன்னதாக ரஜினி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‛‛இன்று(நேற்று மே 23) என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன். இது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்'' என பதிவிட்டார்.