உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / “பொன்னியின் செல்வன்” தந்த பொற்கால வெள்ளித்திரை இயக்குநர் மணிரத்னம்

“பொன்னியின் செல்வன்” தந்த பொற்கால வெள்ளித்திரை இயக்குநர் மணிரத்னம்

பாரம்பரிய சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர்தான், இந்தியாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம். அவரது 67வது பிறந்த தினம் இன்று…

* கோபாலரத்னம் சுப்ரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்ட மணிரத்னம், 1956ஆம் ஆண்டு ஜுன் 02 அன்று, தமிழ்நாட்டிலுள்ள மதுரை மாநகரில் பிறந்தார்.

* தந்தை கோபால ரத்னம் திரைப்பட விநியோகஸ்தராக இருந்தவர். 'வீனஸ்' கிருஷ்ணமூர்த்தி என்றழைக்கப்படும் இவரது மாமா ஒரு திரைப்பட தயாரிப்பாளர். “வீனஸ் பிக்சர்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வந்தவர்.

* தனது ஆரம்பகால பள்ளிப் படிப்பு மற்றும் கல்லூரி படிப்பை சென்னையிலும், மேலாண்மை முதுகலை பட்டத்தை மும்பையிலும் படித்து முடித்தார் மணிரத்னம்.

* எந்த ஒரு திரைப்பட இயக்குநரிடமும் உதவியாளராக பணிபுரியாமல் நேரடியாக இயக்குநர் அவதாரம் எடுத்தவர் தான் நமது பெருமைக்குரிய மணிரத்னம்.

* 1983ஆம் ஆண்டு ஹிந்தி நடிகர் அனில் கபூர் மற்றும் லட்சுமி நடிப்பில் வெளிவந்த “பல்லவி அனுபல்லவி” என்ற கன்னட திரைப்படம்தான் மணிரத்னத்தை இயக்குநர் மணிரத்னமாக முதன் முதலில் வெள்ளித்திரைக்கு அடையாளப்படுத்தியது.

* பின்னர் 1984ல் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் “உணரு” என்ற திரைப்படத்தை இயக்கிய இவருக்கு, 1985ல் வெளிவந்த “பகல்நிலவு” திரைப்படம்தான் தமிழில் இவரை ஒரு இயக்குநராக அறிமுகப்படுத்தியது.

* பின்னர் கோவை தம்பி தயாரிப்பில் “இதயக்கோயில்” என்னும் திரைப்படத்தை இயக்கிய இவரது ஆரம்பகால திரைப்படங்கள் பெரிதளவில் பேசப்படாமல் இருந்தாலும், 1986ஆம் ஆண்டு இவர் இயக்கிய “மௌனராகம்” திரைப்படம் அனைவரையும் ஈர்த்ததோடு, முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் மணிரத்னத்தையும் இடம்பெறச் செய்தது.

* 1987ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசனோடு இணைந்த இயக்குநர் மணிரத்னம், “நாயகன்” திரைப்படத்தை இயக்கி வெளியிட்டு ஒட்டுமொத்த திரையுலகையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.

* தொடர்ந்து “அக்னிநட்சத்திரம்”, “அஞ்சலி” என இயக்கி வந்த வேளையில், 1991ல் “தளபதி” என்ற திரைப்படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தனது இயக்கத்தில் நடிக்க வைத்தும் அழகு பார்த்தார் மணிரத்னம்.

* “பல்லவி அனுபல்லவி” என்ற தனது முதல் படத்திலிருந்து “தளபதி” திரைப்படம் வரை இசைஞானி இளையராஜாவுடன் பயணித்து வந்த இயக்குநர் மணிரத்னம், 1992ல் இவர் இயக்கிய “ரோஜா” என்ற திரைப்படத்தின் மூலம் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானை இசையமைப்பாளராக அறிமுகம் செய்து பெருமை கண்டார்.

* அன்று ஆரம்பமான இந்த வெற்றி கூட்டணி, தற்போது இவரது இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப் திரைப்படங்களான “பொன்னியின் செல்வன்”, “பொன்னியின் செல்வன் - 2 வரை தொடர்கிறது.

* திரைப்பட இயக்கம் தவிர்த்து “மெட்ராஸ் டாக்கீஸ்” என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் ஆரம்பித்து, பல வெற்றிப் படங்களை தயாரித்ததன் மூலம் தன்னை ஒரு தயாரிப்பாளராகவும் உயர்த்திக் கொண்டார் இயக்குநர் மணிரத்னம்.

* மற்ற இயக்குநர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு காணப்படும் இவரது திரைப்படங்களின் வெற்றிக்கு நேர்த்தியான திரைக்கதையும், தொழில் நுட்பமும், நீண்ட நெடிய வசனங்களின்றி ஒற்றை வார்த்தை வசனங்களும் பெரிதும் உதவியது என்பது அனைவரும் அறிந்ததே.

* “6 தேசிய விருதுகள்”, “பத்மஸ்ரீ விருது”, “தமிழ்நாடு அரசு சினிமா விருதுகள்”, “பிலிம் பேர் விருதுகள்”, “கர்நாடக அரசு சினிமா விருது”, “நந்தி விருது”, “வி சாந்தாராம் விருது” என ஏராளமான விருதுகள் இவரது படைப்பாற்றலுக்கு கிடைத்த கௌரவங்கள்.

* தனது 40 ஆண்டுகால வெள்ளித்திரைப் பயணத்தில் 28 திரைப்படங்கள் வரை இயக்கியிருக்கும் இந்த அற்புத திரைக்கலைஞனின் பிறந்த தினமான இன்று அவரை இந்தியாவின் பெருமை என வாழ்த்தி நாமும் இன்புறுவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !